ஆக்சிஜன் விநியோகத்தை உறுதி செய்ய நடவடிக்கை: தமிழக அரசு

புதுடெல்லி, மே.2-

ஆக்சிஜன் வினியோகத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா பேரிடர் காலத்தில் அத்தியாவசிய மருந்து பொருட்கள் விநியோகம், சேவைகள் தொடர்பாக தானாக வழக்குப்பதிவு செய்து விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எல்.நாகேஸ்வரராவ், ரவீந்திர பட் அடங்கிய அமர்வு, இந்த விவகாரத்தில் மத்திய, மாநில, யூனியன் பிரதேச அரசுகள், உயல்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர்கள் பதில் அளிக்குமாறு கடந்த ஏப்ரல் மாதம் 22ந் தேதி உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில், ‘தமிழகத்தில் அரசு நிறுவனங்கள் வாயிலாகத் தயாரிக்கப்படும் ஆக்சிஜன் 395 டன்னில் இருந்து, 882 டன்னாக அதிகரிக்க வகை செய்யப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களும் அவற்றின் தயாரிப்பை 1166 டன்னாக அதிகரித்துள்ளன. இது நாட்டிலேயே 2வது அதிக தயாரிப்பாகும். விரைவில் அவற்றின் முழு திறனைக் கொண்டு ஆக்சிஜன் தயாரிக்கும். எனவே ஆக்சிஜன் விநியோகத்தை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன’ என்று கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 282 அரசு மருத்துவமனைகள் உள்பட 734 மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் மாநிலத்தில் கொரோனா சிகிச்சைக்குத் தேவைப்படும் அத்தியாவசிய மருந்துகளுக்கு பற்றாக்குறை இல்லை எனவும் கூறப்பட்டு இருந்தது.

மேலும் மாவட்ட அளவில் கொரோனா பரிசோதனைகளும் தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.