திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி: மம்தா பானர்ஜிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

கொல்கத்தா,
மேற்குவங்காளத்தில் 292 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் முதல்மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ்-இடதுசாரி கூட்டணி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன.

தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இதில் ஆரம்பம் முதலே திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை வகித்து வந்தது. தற்போதைய நிலவரப்படி, திரிணாமுல் காங்கிரஸ் 215 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பாஜக 76 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. மற்றவை 1 தொகுதியில் முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் மேற்குவங்காளத்தில் பெரும்பான்மையுடன் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை தக்கவைத்துக்கொண்டுள்ளது. 
மேற்குவங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றிபெற்றதற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், மேற்குவங்காளத்தை தக்கவைத்துக்கொண்டுள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 
இது தொடர்பாக பிரதமர் மோடி தெரிவித்ததாவது, மேற்குவங்காளத்தில் திரிணாமுல் காங்கிரசின் வெற்றிக்கு மம்தா பானர்ஜிக்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன். மக்களின் தேவையை நிறைவேற்றவும், கொரோனா தொற்றை வீழ்த்தவும் மேற்குவங்காள அரசுக்கு மத்திய அரசு அனைத்து விதமான உதவிகளையும் தொடர்ந்து வழங்கும். எங்கள் கட்சிக்கு (பாஜக) வாக்களித்த மேற்குவங்காள சகோதர சகோதரிகளுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 
முன்னதாக மிகக் குறைவான நிலையில் இருந்து தற்போது பாஜகவின் இருப்பு கணிசமாக அதிகரித்துள்ளது. மக்களுக்கு பாஜக தொடர்ந்து பணி செய்யும். தேர்தலில் பணிபுரிந்த பாஜக கட்சியினர் அனைவருக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.