நந்திகிராமில் சொல்லி அடித்த மம்தா… மூன்றாவது முறையாக முதல்வர் ஆகிறார்

கொல்கத்தா:
294 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட மேற்கு வங்காளத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்ற நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்படுகின்றன. இந்த தேர்தலில் ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவியது. 
முதல்வர் மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அவரது முன்னாள் உதவியாளர் சுவேந்து அதிகாரி பாஜக சார்பில் களமிறங்கினார். அவர், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தபோது, நந்திகிராம் தொகுதியில் மம்தாவை எதிர்த்து போட்டியிட்டு தோற்கடிப்பேன் என சவால் விடுத்தார். இந்தச் சவாலை ஏற்ற மம்தா, நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டார். இதனால் நந்திகிராம் தேர்தல் களம் மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. இதில் வெற்றி பெறுவது மம்தா பானர்ஜிக்கு கவுரவ பிரச்சனையாக கருதப்பட்டது. 
சுவேந்து அதிகாரி
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையின் துவக்கத்தில், மம்தா பானர்ஜி பின்னடைவை சந்தித்தார். சுவேந்து அதிகாரி முன்னிலையில் இருந்தார். தொடர்ந்து அவர் பின்தங்கியதால் அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 6 சுற்றுகள் வரை பின்தங்கிய மம்தா, 7வது சுற்றில் அதிக வாக்குகள் வாங்கினார். அந்த சுற்றில் 2700 வாக்குகள் வித்தியாசத்தில் மம்தா முன்னிலை பெற்றதால் தொண்டர்கள் உற்சாகமடைந்தனர். 
அதன்பின்னர் அடுத்தடுத்த சுற்றுகளில் தொடர்ந்து முன்னிலை பெற்ற மம்தா, வாக்கு எண்ணிக்கை நிறைவில் சுவேந்து அதிகாரியை தோற்கடித்து வெற்றி வாகை சூடினார். 
ஒட்டுமொத்த முன்னிலை மற்றும் வெற்றி நிலவரத்தை பொருத்தவரை, திரிணாமுல் காங்கிரஸ் மெஜாரிட்டிக்கு தேவையான 148 இடங்களை விட அதிக இடங்களை கைப்பற்றும் நிலை உள்ளது. மாலை நிலவரப்படி 216 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி முன்னிலையில் இருந்தது. பாஜக கூட்டணி 76 இடங்களில் முன்னிலையில் இருந்தது. எனவே, மேற்கு வங்கத்தில் மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது. மூன்றாவது முறையாக மம்தா பானர்ஜி முதலமைச்சராகிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.