5 மாநில சட்டசபை தேர்தல்; இன்று ஓட்டு எண்ணிக்கை| Dinamalar

சென்னை : தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை இன்று காலை எட்டு மணிக்கு துவங்குகிறது. கன்னியாகுமரி லோக்சபா இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கையும் இன்று நடக்கிறது.

தமிழகம், கேரளா, அசாம், மேற்கு வங்கம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல்களின் ஓட்டு எண்ணிக்கை இன்று (மே 2 ) காலை எட்டு மணிக்கு துவங்குகிறது. கடந்த மார்ச் 27 ம் தேதி முதல் தேர்தல் துவங்கியது. 5 மாநிலங்களில் உள்ள 18 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் வெவ்வேறு கட்டங்களாக நடந்த தேர்தல்களில் தங்கள் ஓட்டுகளை பதிவு செய்தனர். மொத்தம் 824 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 294 தொகுதிகளுக்கு மார்ச் 27 முதல் ஏப்., 29 வரை எட்டு கட்டங்களாக தேர்தல் நடந்தது. அங்கு பா.ஜ. மற்றும் திரிணாமுல் கட்சிகள் போட்டியிட்டன. கேரளாவில் உள்ள 140 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. கேரளாவில் இடது சாரி கட்சியும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியும் போட்டியிட்டன. அசாமில் உள்ள 126 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக நடந்த தேர்தலில் பா.ஜ., , இந்திய தேசிய காங்., மற்றும் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சிகள் போட்டியிட்டன. ஏப்., 6ல் புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளில் நடந்த தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கும், அகில இந்திய நமது ராஜ்யம் காங்., கட்சிக்கும் கடும் போட்டி நிலவியது.


latest tamil news

தமிழகத்தில் உள்ள, 234 சட்டசபை தொகுதிகளுக்கும், கன்னியாகுமரி லோக்சபா தொகுதிக்கும், இம்மாதம், 6ம் தேதி தேர்தல் நடந்தது. தேர்தலில், 72.81 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின. மொத்தம் 4.09 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் தமிழகத்தில் தங்களுடைய ஓட்டுகளை பதிவு செய்தனர்.

இந்த தேர்தலை பொறுத்தவரை அ.தி.மு.க., கூட்டணி, தி.மு.க., கூட்டணி, தே.மு.தி.க., கூட்டணி, மநீம என பல்முனைப் போட்டி நிலவியதால் தேர்தல் முடிவுகள் பொதுமக்கள் மற்றும் கட்சியினரிடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. கருணாநிதி மற்றும் ஜெயலலிதா இருவரும் இல்லாமல் நடந்த முதல் தேர்தல் என்பதால் இத்தேர்தல் முடிவு முக்கியத்துவம் பெறுகிறது.

75 மையங்கள்

தமிழகம் முழுதும் பதிவான ஓட்டுகள், இன்று காலை, 8:00 மணிக்கு, 75 மையங்களில் எண்ணப்பட உள்ளன. ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் பதிவான ஓட்டுகளை, தனித்தனி அறைகளில் எண்ண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஒரு தொகுதிக்கு, குறைந்தபட்சம் 14 மேஜை என்ற கணக்கில், 3276 மேஜைகளும், அதிக ஓட்டுச் சாவடி கொண்டிருக்கும் தொகுதிகளுக்காக, ஓட்டு எண்ணும் மையங்களில் கூடுதல் மேஜைகளும் போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வகையில், 3372 மேஜைகளில், நாளை ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இது தவிர, தபால் ஓட்டுக்கள், 739 மேஜைகளில் எண்ணப்பட உள்ளன.

ஓட்டு எண்ணிக்கையின் போது தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில், நாளை முழு ஊரடங்கு என்பதால், ஓட்டு எண்ணும் மையங்களுக்கு, பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணிக்கை துவங்கியதும் காலை ஒன்பது மணி அளவில் முன்னணி நிலவரங்கள் வெளியாகும் என தெரிகிறது. இன்று நள்ளிரவுக்குள் ஓட்டு எண்ணிக்கை முடிப்பதற்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கை

கொரோனா இரண்டாம் அலை நாடு முழுவதும் பரவி வருவதால், ஓட்டு எண்ணும் மையங்களில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

வேட்பாளர்கள், அவர்களின் தலைமை முகவர், ஓட்டு எண்ணிக்கை முகவர்கள், பத்திரிகையாளர்கள், ஓட்டு எண்ணிக்கை அலுவல் தொடர்பாக அடையாள அட்டை வைத்திருப்போர் மட்டுமே, ஓட்டு எண்ணும் மையங்களின் உள்ளே அனுமதிக்கப்படுவர்.அவர்கள், அரசு மருத்துவமனை அல்லது அனுமதி பெற்ற மருத்துவமனைகளில், 72 மணி நேரத்திற்கு முன், கொரோனா பரிசோதனை செய்து, ‘நெகட்டிவ்’ சான்றிதழ் பெற்று இருக்க வேண்டும் அல்லது இருமுறை கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.

உடலின் வெப்பநிலை, 98.6 பாரன்ஹீட்டுக்கு மேல் உள்ளவர்கள், உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள்.தேர்தல் கமிஷன் அறிவுரைப்படி, காகிதம், நோட் பேட், ஓட்டுச்சாவடி தலைமை அலுவலரால் தரப்பட்ட, ’17 சி’ இரண்டாவது நகலை மட்டுமே மையத்திற்குள் எடுத்து செல்லலாம். தேர்தல் கமிஷனால், அதிகாரம் அளிக்கப்பட்ட அதிகாரியின் அனுமதியின்படி, கைப்பிடி கேமரா எடுத்து வருவோர் அனுமதிக்கப்படுவர்.

மொபைல் போன், கேமரா, பேனா, பாட்டில்கள், தகர டப்பாக்கள், டிபன் பாக்ஸ், குடை, தீப்பெட்டி, தின்பண்டங்கள், வேதிப்பொருட்கள் எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது. மையத்தை விட்டு வெளியே செல்வோர், மீண்டும் உள்ளே வர அனுமதி கிடையாது.ஓட்டு எண்ணும் மையங்களில் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை கிருமிநாசினி தெளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாசகர்கள் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தினமலர் இணையதளத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.