அசாமில் 2வது முறையாக ஆட்சியை பிடித்தது பாஜ

கவுகாத்தி: சட்டசபைத் தேர்தலில் 78 இடங்களைக் கைப்பற்றியதன் மூலம் பாஜ தலைமையிலான கூட்டணி மீண்டும் அசாமில் ஆட்சியை தக்க வைத்துள்ளது. அசாமில் 126 தொகுதிளுக்கான சட்டசபைத் தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்றது. மார்ச் 27, ஏப்ரல் 1 மற்றும் 6ம் தேதிகளில் நடைபெற்ற இந்த வாக்குப்பதிவுகளில் 79 முதல் 82.33 சதவிகிதம் வாக்குகள் பதிவானது. பாஜ தலைமையிலான கூட்டணியில் அசோம் கன பரிஷத், யுபிபிஎல் மற்றும் ஞான சுரக்‌ஷா கட்சிகள் இணைந்து தேர்தலை சந்தித்தன. எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து மெகா கூட்டணி அமைத்தது காங்கிரஸ். இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, அஞ்சலிக் கன மோர்ச்சா, சிபிஐ மற்றும் சிபிஐ(எம்) உள்ளிட்ட கட்சிகளுடன் காங்கிரஸ் களம் கண்டது. இந்த இரு பிரம்மாண்ட அணிகளுக்கிடையே ஏஜேபி, ரஜோர்தால் போன்ற கட்சிகளும் களம் கண்டன. நேற்று காலை நடந்த வாக்கு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே பாஜ கூட்டணி முன்னிலை வகித்தது. மெஜாரிட்டிக்குத் தேவையான 64 என்ற எண்ணிக்கையை பிற்பகலில் பாஜ கூட்டணி கடந்து 78 இடங்களை வென்றது. இதனால் அசாமில் மீண்டும் பாஜ ஆட்சி தக்க வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்ட முதல்வர் சர்பானந்த சோனவால், ‘அசாமில் மீண்டும் பாஜ ஆட்சியை தக்க வைக்க பொதுமக்கள் ஆசிர்வதித்துள்ளனர். ஏஜிபி மற்றும் யுபிபிஎல் கூட்டணி கட்சிகளுடன் மீண்டும் அதிகாரத்திற்கு வருகிறோம்’ என்று நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.காங்கிரசுக்கு 46 இடம்* மெகா கூட்டணி அமைத்திருந்தும் காங்கிரஸ் 46 இடங்களை மட்டுமே வென்றுள்ளது. இதில் குடியுரிமை சட்டத்துக்கான போராட்டங்களால் உருவான ஏஜேபி கட்சி ஒரு இடத்தை வென்றுள்ளது.* இதேபோல், சிறையில் இருக்கும் போராட்டக்காரரான அகில் கோகாய் சிப்சகர் தொகுதியில் வென்றுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.