‘அன்று பகுதி பிரதிநிதி… இன்று முதல்வர் அரியணை’ – தொடரும் மு.க.ஸ்டாலினின் வெற்றிப் பாதை!

முதன்முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சர் பொறுப்பை ஏற்கவுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அரசியலிலும் அரசிலும் கடந்து வந்த பாதை இங்கே…
மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் மகனான மு.க.ஸ்டாலின் அரசியலில் படிப்படியாக உயர்ந்து முதலமைச்சராக பொறுப்பேற்கும் நிலையை தொட்டிருக்கிறார். 1953ல் பிறந்த தனது பிள்ளைக்கு சோவியத் கம்யூனிஸ்ட் தலைவர் ஜோசப் ஸ்டாலின் நினைவாக அவரது பெயரை சூட்டினார் கருணாநிதி. ஸ்டாலினுக்கு 14 வயதிலேயே அரசியல் ஆர்வம் தென்படத்தொடங்கியது. சென்னை கோபாலபுரம் பகுதியில் திமுக பிரதிநிதியாக செயல்பட்டார். சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலை வரலாறு பட்டம் பெற்ற ஸ்டாலின், சில திரைப்படங்கள், மேடை நாடகங்களில் தோன்றினார்.
1973 ஆம் ஆண்டு திமுகவின் பொதுக்குழு உறுப்பினராக தேர்வானார். 1976இல் அவரச நிலை பிரகடனத்தின் போது கைது செய்யப்பட்டு ஓராண்டு கடும் சித்ரவதைக்கு ஆளானார். இந்த நிகழ்வுக்கு பின்னர் ஸ்டாலின் குறித்து திமுகவினர் மற்றும் மக்கள் மத்தியில் அறிமுகமும் மதிப்பும் அதிகமானது. 1982ஆம் ஆண்டு திமுகவில் இளைஞரணி என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு அதன் செயலாளரானார்.
1984 ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆயிரம்விளக்கம் தொகுதியில் முதன்முறையாக களம்கண்ட ஸ்டாலின் வெற்றி வாய்ப்பை இழந்தார். எனினும் 1989, 1996, 2001, 2006ல் நடந்த பேரவைத் தேர்தல்களில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிகண்டார். 1991ல் நடந்த தேர்தலில் தோல்வியையும் சந்தித்திருந்தார்.
image
1996, 2001ல் சென்னை மாநகராட்சி மேயராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டாலின், மேம்பாலங்களை கட்டி நகரின் உள்கட்டமைப்பை பலப்படுத்தினார். 2003ல் கட்சியில் துணைப்பொதுச்செயலாளரானவர், 2008ல் பொருளாளராக உயர்ந்தார். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தவர், 2009ல் தமிழகத்தின் முதல் துணை முதலமைச்சராகவும் பெறுப்பேற்றுக்கொண்டார்.

2011, 2016ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் வென்ற ஸ்டாலின் மூன்றாவது முறையாக மீண்டும் அதே தொகுதியில் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 2017ல் திமுக செயல்தலைவரானவர், தலைவரும் தந்தையுமான கருணாநிதியின் மறைவுக்கு பிறகு 2018ல் திமுகவின் தலைவராக பொறுப்பேற்றார்.
ஸ்டாலினின் தலைமையில் 2019ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு – புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில், 39ல் திமுக வெற்றிபெற்றது. இந்நிலையில் திமுக 10 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் தமிழ்நாட்டை ஆட்சி புரிய உள்ளது. ’மு.க. ஸ்டாலினாகிய நான்’ என்ற ஸ்டாலினின் உரைக்காக அத்தனை திமுக தொண்டர்களும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.