ஆர்டர் தரவில்லை என்றதால் சர்ச்சை தடுப்பூசி தட்டுப்பாடு இன்னும் 3 மாதம் நீடிக்கும்: சீரம் சிஇஓ அதிர்ச்சி தகவல்

புதுடெல்லி: ‘கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு மேலும் இரண்டு அல்லது மூன்று மாதம் நீடிக்கும்’ என சீரம் நிறுவன சிஇஓ அடர் பூனவல்லா கூறி உள்ளார். மேலும், மத்திய அரசு புதிதாக எந்த ஆர்டரும் தரவில்லை என வெளியான தகவலை அவர் மறுத்துள்ளார். இந்தியாவில் தற்போது கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரண்டு கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இதில் கோவிஷீல்டு மருந்தை புனேவில் உள்ள சீரம் நிறுவனமும், கோவாக்சினை ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனமும் உற்பத்தி செய்கின்றன. முன்களப் பணியாளர்கள், முதியவர்கள், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், கடந்த மே 1ம் தேதி முதல் நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது.ஆனால் தற்போதைய நிலையில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுவதால் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை 11 மாநிலங்கள் மட்டுமே தொடங்கி உள்ளன. இந்நிலையில், சீரம் நிறுவன சிஇஓ அடர் பூனவல்லா இங்கிலாந்தில் ‘ஃப்னான்சியல் டெய்லி’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், ‘‘தற்போது மாதத்திற்கு 6-7 கோடி டோஸ் உற்பத்தி செய்யப்படுகிறது. ஜூலைக்கு பிறகு தான் 10 கோடி டோஸ் உற்பத்தியாக அதிகரிக்கப்பட உள்ளது. எனவே இன்னும் 2-3 மாதத்திற்கு தடுப்பூசி தட்டுப்பாடு நீடிக்கும். இந்தியாவில் கொரோனா 2வது அலை இவ்வளவு சீக்கிரத்தில் தாக்கும் என அதிகாரிகள் யாரும் எதிர்பார்க்கவில்லை. மேலும், ஆண்டுக்கு 100 கோடி தடுப்பூசி உற்பத்தி செய்ய வேண்டிய நிலை வரும் என நாங்களும் நினைக்கவில்லை. மத்திய அரசிடம் இருந்து புதிதாக ஆர்டர்கள் எதுவும் கிடைக்கப் பெறாததால் தடுப்பூசி உற்பத்தி உடனடியாக விரைவுபடுத்தப்படவில்லை’’ என்றார். ஏற்கனவே, இந்தியாவில் தடுப்பூசி வழங்கக் கோரி சக்திவாய்ந்த நபர்களிடமிருந்து பல்வேறு மிரட்டல்கள் வந்ததைத் தொடர்ந்து பூனவல்லா தனது குடும்பத்துடன் இங்கிலாந்து சென்று தங்கியுள்ளார். தற்போது தடுப்பூசி தட்டுப்பாடு நிலவும் நிலையில் மத்திய அரசு புதிதாக எந்த ஆர்டரும் தரவில்லை என அவர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.இதற்கு மத்திய அரசு தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. கடந்த முறை கொடுக்கப்பட்ட 10 கோடி டோஸ் ஆர்டரில், தற்போது வரை 8.744 கோடி டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளை சீரம் நிறுவனம் வழங்கி உள்ளது. இப்படிப்பட்ட நிலையில், மே, ஜூன், ஜூலை மாதங்களில், 11 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்க சீரம் இந்தியா நிறுவனத்துக்கு 100 சதவீத முன்பணமாக ரூ.1732.50 கோடி கடந்த ஏப்ரல் 28ம் தேதி வழங்கப்பட்டது. அதை அந்நிறுவனம் அன்றே பெற்றுக் கொண்டது. இதே போல, 5 கோடி கோவாக்சின் தடுப்பூசி டோஸ்களுக்கும் முன்பணம் தரப்பட்டுள்ளது. ஆகையால், தடுப்பூசிகளுக்கு புதிதாக ஆர்டர் கொடுக்கவில்லை என கூறுவது தவறானது என மத்திய தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.இதையடுத்து தனது டிவிட்டரில் பூனல்லா, ‘‘நான் கூறிய தகவல் தவறாக வெளிவந்துள்ளது. தற்போது வரை நாங்கள் 26 கோடிக்கும் அதிகமான டோஸ்களுக்கான ஆர்டர்கள் பெற்றுள்ளோம். அதில் 15 கோடி டோஸ் சப்ளை செய்யப்பட்டுள்ளது. 11 கோடி டோஸ் விரைவில் தரப்படும். உற்பத்தியை ஒரே நாள் அதிகரித்து விட முடியாது. குறைவான மக்கள் தொகை கொண்ட நாடுகளே தடுப்பூசியை உற்பத்தி செய்வதில் திணறும் நிலையில், இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில் தேவையான தடுப்பூசியை வழங்குவது சாதாரண வேலையல்ல. அனைவருக்கும் விரைவில் தடுப்பூசி கிடைக்க வேண்டுமென்பதே எங்களின் விருப்பம். அதற்காக நாங்களும் கடினமாக உழைக்கிறோம்’’ என கூறி உள்ளார்.* இந்தியாவில் 15 கோடியே 71 லட்சத்து 98 ஆயிரத்து 207 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது மொத்த மக்கள் தொகையில் 12 சதவீதமாகும்.* 12 கோடியே 83 லட்சத்து 74 ஆயிரத்து 277 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.* 2 கோடியே 88 லட்சத்து 23 ஆயிரத்து 930 பேர் 2 டோஸ் தடுப்பூசியும் போட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.