‘உண்மை’யை மறைக்க மயானங்களுக்கு ‘புதிய விதிமுறைகள்’ போடுகிறதா உ.பி அரசு?

கொரோனாவின் கோர முகத்தை மறைக்கவும், மயானங்களின் உண்மைநிலையை வெளியுலகுக்கு காட்டுவதை தடுக்கவும் உத்தரப் பிரதேச அரசு முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் கொரோனா இரண்டாவது அலையின் தீவிரத்தன்மை காரணமாக ஆக்சிஜன் பற்றாக்குறை நீடித்து வருகிறது. இருந்தாலும், மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையே இல்லையென கூறி சில தினங்களுக்கு முன் பேட்டி கொடுத்தார் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத். இந்த நிலையில், ‘அன்று ஆக்சிஜன் பற்றாக்குறை மறைக்க முயன்றதைப் போலவே, உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று இறப்பு எண்ணிக்கையை குறைத்து காட்டும் முயற்சியில் அடுத்தகட்டமாக ஈடுபடவிருக்கிறார் முதல்வர் யோகி’ என்று வட இந்திய செய்தி ஊடகங்கள் சில கூறுகின்றன. 
இது தொடர்பான வெளியான செய்திகளில், ‘உத்தரப் பிரதேசத்தில் கொரோனா இறப்பு எண்ணிக்கையை மறைக்கும் நோக்கில், மயானங்களில் எரிக்கப்படும் சடலங்கள் பற்றிய எண்ணிக்கையை வெளியே தெரியாமல் பார்த்துக்கொள்ளும் முயற்சியில், அம்மாநிலத்தின் ஆட்சி செய்வோர் தரப்பு ஈடுபட தொடங்கியுள்ளனர். கள நிலவரத்தின் கோரமுகம் வெளியுலகுக்கு தெரியாமல் இருக்க, சடலங்களை புகைப்படம் எடுப்பது மாநிலம் முழுக்க தடுக்கப்படுவிருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.
இதை சாத்தியப்படுத்தும் முயற்சியில் உ.பி. முதல்வரின் சொந்த ஊரான கோரக்பூரில் நெகிழி மற்றும் துணியால் செய்யப்பட்ட பேனர்களை கொண்டு, சடலங்களை சுமந்துசெல்லும் வழி நிரப்பப்பட்டுள்ளது. பேனர்களில், “இங்கே சடலங்கள் அனைத்தும் இந்து சமய முறைகளின்படி சடங்குகள் செய்யப்பட்டு எடுத்துச் செல்லப்படுகின்றன. இவற்றை புகைப்படமோ, காணொளியோ எடுப்பது தண்டனைக்குரியக் குற்றம்” என எழுதப்பட்டிருக்கிறது. இதுபற்றி சட்ட நிபுணர்கள் சொல்லும்போது, “மயானங்களில் புகைப்படம் எடுப்பது, குற்றம் என எந்தவொரு சட்டமும் சொல்லவில்லை” எனக் கூறியுள்ளனர்.
image
கொரோனா பேரிடர் பிரச்னையில் ஏப்ரல் மாத இடையிலேயே, ஆதித்யநாத் அரசு லக்னோ, பைகுந்த் தாம் மற்றும் குலாலா கட் பகுதிகளை சேர்ந்த மயானத்தின் வழிகளை தகரம் வைத்து அடைத்தனர். ராஜ்காத் பகுதியிலுள்ள மின்மயானத்திலும், தற்காலிகமாக இருக்கும் பிற எரியூட்டும் இடங்களிலும், அவற்றுக்கு நுழைவதற்கு சிலதூரம் முன்பிருந்தே சுவர்கள் கட்டப்பட்டு, சடலங்களின் நிலைமை மறைக்கப்பட்டன’ என்று அந்தச் செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோராக்பூர் நகரை சேர்ந்த மாவட்ட அதிகாரி ஒருவர், டெலிகிராஃப் என்ற செய்தி ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், “பேனர் வைக்க சொல்லி எங்களுக்கு உத்தரவு வந்தது. அதனால் வைத்திருக்கிறோம். இப்போதெல்லாம் ஒரு நாளுக்கு சராசரியாக 45 சடலங்கள் எங்கள் மயானத்துக்கு வருகின்றன. இவை, சாதாரண நாட்களைவிடவும் 6 முதல் 7 மடங்கு அதிகமானது. சடலங்களை எரிக்க, விறகு போதுமான அளவு இல்லை. அதனால் பல சடலங்கள் எரியூட்டப்படாமல் காத்திருக்கின்றன” எனக் கூறியுள்ளார்.
“சடலங்கள் எந்த நிலையில் உள்ளே கொண்டு செல்லப்படுகிறது, கொரோனாவால் இறப்பவர்கள் உரிய மருத்துவ வழிமுறைகளோடுதான் தகனம் செய்யப்படுகின்றரா என அனைத்தையும் இப்படி மறைப்பது, பிறரை ஏமாற்றுவதாக நினைத்துக்கொண்டு தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ளும் வழிமுறைதான்” என்கிறார்கள் மருத்துவ செயற்பாட்டாளர்கள்.
தகவல் உறுதுணை: The Telegraph IndiaSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.