ஐதராபாத்தின் பரிதாபம் தொடருகிறது: ஜோஸ் பட்லரின் அபார சதத்தால் ராஜஸ்தான் வெற்றி

புதுடெல்லி, 
14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை டெல்லி அருண்ெஜட்லி மைதானத்தில் நடந்த 28-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்சை எதிர்கொண்டது. ஐதராபாத் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட டேவிட் வார்னருக்கு ஆடும் லெவனிலும் இடம் கிடைக்கவில்லை. இதே போல் சித்தார்த் கவுல், சுசித் ஆகியோரும் கழற்றிவிடப்பட்டனர். இவர்களுக்கு பதிலாக முகமது நபி, புவனேஷ்வர்குமார், அப்துல் சமாத் இடம் பிடித்தனர். ராஜஸ்தான் அணியில் ஜெய்தேவ் உனட்கட், ஷிவம் துபே நீக்கப்பட்டு கார்த்திக் தியாகி, அனுஜ் ரவாத் சேர்க்கப்பட்டனர்.

‘டாஸ்’ ஜெயித்த ஐதராபாத் கேப்டன் வில்லியம்சன் முதலில் ராஜஸ்தானை பேட் செய்ய அழைத்தார். இதன்படி ஜெய்ஸ்வாலும், ஜோஸ் பட்லரும் ராஜஸ்தானின் இன்னிங்சை தொடங்கினர். ஜெய்ஸ்வால் 12 ரன்னில், ரஷித்கானின் சுழலில் எல்.பி.டபிள்யூ. ஆனார். ரஷித்கானின் பந்து வீச்சில் பட்லரும் வெளியேறி இருக்க வேண்டியது. 7 ரன்னில் இருந்த போது ‘லாங்ஆன்’ திசையில் தூக்கியடித்த பந்தை விஜய்சங்கர் பிடிக்க தவறினார்.
ேஜாஸ் பட்லர் சதம்
இதன் பின்னர் கேப்டன் சஞ்சு சாம்சனுடன் இணைந்து ஜோஸ் பட்லர் வெளுத்து கட்டினார். சிறிய மைதானம் என்பதால் பேட்டில் சரியாக பட்ட பந்துகள் எல்லைக்கோட்டுக்கு சிதறி ஓடின. சுழற்பந்து வீச்சாளர் முகமது நபியின் ஒரே ஓவரில் 2 சிக்சர், 2 பவுண்டரி விரட்டியடித்தார். ஸ்கோர் 167 ஆக உயர்ந்த போது சாம்சன் (48 ரன், 33 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) விஜய் சங்கரின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார். அதே ஓவரில் ஜோஸ் பட்லர் (இங்கிலாந்தை சேர்ந்தவர்) தனது முதலாவது 20 ஓவர் போட்டி சதத்தை நிறைவு செய்தார். நடப்பு தொடரில் அடிக்கப்பட்ட 3-வது சதம் இதுவாகும்.
சதத்துக்கு பிறகு சந்தீப் ஷர்மாவின் ஓவரில் 3 சிக்சர்களை கிளப்பிய ஜோஸ் பட்லர் 124 ரன்களில் (64 பந்து, 11 பவுண்டரி, 8 சிக்சர்) போல்டு ஆனார்.
20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட்டுக்கு 220 ரன்கள் குவித்தது. ரியான் பராக் 15 ரன்களுடனும், டேவிட் மில்லர் 7 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
ஐதராபாத் தோல்வி
அடுத்து மெகா இலக்கை நோக்கி களம் கண்ட ஐதராபாத் அணியில் தொடக்க வீரர்கள் மனிஷ் பாண்டே (31 ரன்), ஜானி பேர்ஸ்டோ (30 ரன்) ஓரளவு நல்ல தொடக்கம் தந்தனர். ஆனால் பின்வரிசை வீரர்கள் நெருக்கடியை சமாளிக்க முடியாமல் தகிடுதத்தம் போட்டனர். கேப்டன் வில்லியம்சன் 20 ரன்னிலும், விஜய் சங்கர் 8 ரன்னிலும், கேதர் ஜாதவ் 19 ரன்னிலும் ஏமாற்றம் அளித்தனர். 20 ஓவர்களில் அந்த அணியால் 8 விக்கெட்டுக்கு 165 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் ராஜஸ்தான் 55 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
7-வது லீக்கில் ஆடிய ராஜஸ்தானுக்கு இது 3-வது வெற்றியாகும். அதே சமயம் அடிமேல் அடி வாங்கும் ஐதராபாத்தின் பரிதாபம் தொடருகிறது. அந்த அணி சந்தித்த 6-வது தோல்வியாகும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.