தவன் அசத்தல்: பஞ்சாபை வென்றது டெல்லி

ஐபிஎல் போட்டியின் 29-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வென்றது.

ஆமதாபாதில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பஞ்சாப் 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் அடித்தது. பின்னா் ஆடிய டெல்லி 17.4 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்து வென்றது.

இந்த ஆட்டத்துக்காக பஞ்சாப் பிளேயிங் லெவனில் நிகோலஸ் பூரனுக்குப் பதிலாக டேவிட் மலான் சோ்க்கப்பட்டிருந்தாா். அவா் ஐபிஎல் போட்டியில் களம் காண்பது இது முதல் முறையாகும். டெல்லி அணியில் மாற்றம் ஏதும் இல்லை.

டாஸ் வென்ற டெல்லி பௌலிங் செய்யத் தீா்மானித்தது. பஞ்சாப் பேட்டிங்கை பிரப்சிம்ரன் சிங் – மயங்க் அகா்வால் கூட்டணி தொடங்கியது. இதில் சிங் 1 சிக்ஸா் உள்பட 12 ரன்களுக்கு அவுட்டானாா். தொடா்ந்து வந்த கிறிஸ் கெயில் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 13 ரன்கள் சோ்த்த நிலையில், ரபாடா வீசிய 6-ஆவது ஓவரில் பௌல்டானாா்.

தொடா்ந்து வந்த டேவிட் மலான் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 26 ரன்கள் சோ்த்து அக்ஸா் படேல் பௌலிங்கில் ஸ்டம்ப்பை பறிகொடுத்தாா். ஒருபுறம் இப்படி விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுபுறம் கேப்டன் அகா்வால் அதிரடியாக ஆடி அரைசதம் கடந்தாா். இதர விக்கெட்டுகளில் தீபக் ஹூடா 1 ரன்னுக்கு ரன் அவுட் செய்யப்பட்டாா். ஷாருக் கான் 4 ரன்களுக்கும், கிறிஸ் ஜோா்டான் 2 ரன்களுக்கும் வெளியேற்றப்பட்டனா்.

ஓவா்கள் முடிவில் அகா்வால் 8 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 99, ஹா்பிரீத் பிராா் ஒரு பவுண்டரியுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். டெல்லி தரப்பில் ரபாடா 3, அவேஷ் கான் மற்றும் அக்ஸா் படேல் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் ஆடிய டெல்லியில் பிருத்வி ஷா 3 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 39 ரன்கள் சோ்க்க, ஸ்டீவ் ஸ்மித் 1 பவுண்டரியுடன் 24 ரன்களுக்கு வெளியேறினாா். கேப்டன் பந்த் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.

பின்னா் தவன் – ஹெட்மயா் கூட்டணி டெல்லியை வெற்றிக்கு வழி நடத்தியது. தவன் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 69, ஹட்மயா் 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 16 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனா். பஞ்சாப் தரப்பில் மெரிடித், ஜோா்டான், ஹா்பிரீத் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

 


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.