நந்திகிராம் தொகுதியில் குறைந்த வித்தியாசத்தில் மம்தா பானர்ஜி தோல்வி..! மறு வாக்கு எண்ணிக்கை கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் 214 தொகுதிகளில் வெற்றி பெற்றது. எனினும் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி பாஜக வேட்பாளரிடம் வெற்றியைப் பறிகொடுத்தார்.

மேற்குவங்கத்தின் 292 சட்டமன்றத் தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குகள் எண்ணப்படத் தொடங்கியது முதலே பாஜகவுக்கும் திரிணாமூல் காங்கிரசுக்கும் இடையே கடும் போட்டியும் இழுபறியும் நீடித்து வந்தது. இறுதியாக திரிணாமூல் காங்கிரஸ் 213 தொகுதிகளில் வெற்றியைக் கைப்பற்றியது.இதனால் ஹாட்ரிக்காக மூன்றாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளார் மமதா பானர்ஜி.

பாஜகவுக்காக பிரதமர் மோடியும் அமைச்சர் அமித்ஷாவும் தீவிரப் பிரச்சாரம் செய்ததன் பலனாக முதன் முறையாக பெரும் எண்ணிக்கையில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். பாஜகவுக்கு இத்தேர்தலில் 77 இடங்கள் கிடைத்துள்ளன. காங்கிரஸ், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இத்தேர்தலில் படுதோல்வியை சந்தித்தன. இரண்டு இடங்கள் மட்டுமே இதர கட்சிகளுக்கு கிடைத்தன.

திரிணாமூல் காங்கிரஸ் மகத்தான வெற்றி பெற்ற போதும் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜிக்கு பின்னடைவு ஏற்பட்டது. அத்தொகுதியில் பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி ஆயிரத்து 956 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

மக்கள் தீர்ப்பை ஏற்பதாக செய்தியாளர்களிடம் தெரிவித்த மம்தாபானர்ஜி, தாம் தோல்வியடைந்தது பற்றி கவலையில்லை என்று தெரிவித்தார். நந்திகிராம் தொகுதியில் மீண்டும் வாக்குகளை எண்ண தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடப்போவதாக மமதா பானர்ஜி தெரிவித்தார். இதனையடுத்து திரிணாமூல் காங்கிரஸ் பிரதிநிதிகள் குழு தலைமைத் தேர்தல் அதிகாரியை சந்தித்து மறுவாக்கு எண்ணிக்கை கோரி மனு அளித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.