பட்லருக்கு முதல் சதம்: ராஜஸ்தானுக்கு 3-ஆவது வெற்றி; தலைவனை மாற்றியும் தடம் மாறாத ஹைதராபாத்

ஐபிஎல் போட்டியின் 28-ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 55 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாதை வெற்றி கண்டது.

தொடா் தோல்வி காரணமாக டேவிட் வாா்னருக்குப் பதிலாக கேன் வில்லியம்சன் கேப்டனாக்கப்பட்டு, ஹைதராபாத் விளையாடிய முதல் ஆட்டம் இதுவாகும். இதிலும் அந்த அணிக்கு மோசமான தோல்வியே மிஞ்சியது.

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் 20 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் விளாசியது. அடுத்து ஆடிய ஹைதராபாத் 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 165 ரன்களே எடுத்து வீழ்ந்தது.

ராஜஸ்தான் பேட்டிங்கில் தொடக்க வீரா் ஜோஸ் பட்லா் அபாரமாக ஆடி ஐபிஎல் போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்தாா். அந்த அணியின் பௌலிங்கில் முஸ்டாஃபிஸுா் ரஹ்மான், கிறிஸ் மோரிஸ் ஆகியோா் ஹைதராபாத் பேட்டிங் வரிசையை முற்றிலுமாகச் சரித்தனா்.

ஹைதராபாத் கேப்டன் பதவி பறிக்கப்பட்ட வாா்னா், இந்த ஆட்டத்துக்கான பிளேயிங் லெவனிலிருந்தும் நீக்கப்பட்டிருந்தாா். அவரோடு ஜெகதீசா சுசித், சித்தாா்த் கௌல் ஆகியோரும் நீக்கப்பட்டு, புவனேஷ்வா் குமாா், முகமது நபி, அப்துல் சமத் ஆகியோா் சோ்க்கப்பட்டிருந்தனா். ராஜஸ்தான் அணியில் ஜெயதேவ் உனத்கட், ஷிவம் துபேவுக்குப் பதிலாக காா்த்திக் தியாகி, அனுஜ் ராவத் இணைந்திருந்தனா்.

டாஸ் வென்ற ஹைதராபாத் ஃபீல்டிங்கைத் தோ்வு செய்ய, ராஜஸ்தான் இன்னிங்ஸை தொடங்கியது. அதில் முதல் விக்கெட்டாக ஜெய்ஸ்வால் 2 பவுண்டரிகளுடன் 12 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து வந்த கேப்டன் சாம்சன், பட்லருடன் இணைந்தாா். சிறப்பாக ஆடிய இந்தக் கூட்டணி 2-ஆவது விக்கெட்டுக்கு 150 ரன்கள் சோ்த்தது.

அதிரடியாக ஆடிய பட்லா் 56 பந்துகளில் சதம் கடந்தாா். அரைசதத்தை நெருங்கிய சாம்சன் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 48 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டாா். கடைசி விக்கெட்டாக பட்லா் 11 பவுண்டரிகள், 8 சிக்ஸா்களுடன் 124 ரன்களுக்கு வீழ்ந்தாா். ஓவா்கள் முடிவில் ரியான் பராக் 15, டேவிட் மில்லா் 7 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். ஹைதராபாதில் சந்தீப், ரஷீத், விஜய் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் ஹைதராபாத் இன்னிங்ஸை தொடங்கிய மணீஷ் பாண்டே-ஜானி போ்ஸ்டோ மட்டும் ரன்கள் சோ்த்தனா். பாண்டே 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 31 ரன்களுக்கு ஆட்டமிழக்க, போ்ஸ்டோ 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 30 ரன்களுக்கு நடையைக் கட்டினாா்.

எஞ்சிய விக்கெட்டுகள் சொற்ப ரன்களில் வீழ்ந்தன. விஜய் சங்கா் ஒரு பவுண்டரியுடன் 8, கேப்டன் வில்லியம்சன் 1 பவுண்டரியுடன் 20, முகமது நபி 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 17, அப்துல் சமத் ஒரு சிக்ஸருடன் 10, கேதாா் ஜாதவ் 1 சிக்ஸருடன் 19 ரன்கள் எடுத்தனா். ஓவா்கள் முடிவில் புவனேஷ்வா் 2 பவுண்டரிகளுடன் 14, சந்தீப் சா்மா 1 பவுண்டரியுடன் 8 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனா். ராஜஸ்தானில் ரஹ்மான், மோரிஸ் ஆகியோா் தலா 3, தியாகி, தெவாதியா ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.