மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம்: தோல்வியை தழுவிய கமல்ஹாசன் டுவிட்

சென்னை, மே.3-

சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்கள் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத நிலையில், தான் மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாகவும், வாக்களித்த மக்களுக்கு நன்றி என்றும் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் சந்தித்த முதல் சட்டசபை தேர்தலான இத்தேர்தலில் இக்கட்சி 135 இடங்களிலும், இந்திய ஜனநாயக கட்சி 40 இடங்களிலும், சமத்துவ மக்கள் கட்சி 37 இடங்களிலும் என கூட்டணி கட்சிகளோடு இணைந்து 234 தொகுதிகளிலும் போட்டியிட்டது. ஆனால் மக்கள் நீதி மய்யம் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குறிப்பிட்ட சில சுற்றுகள் வரை தொடர்ந்து முன்னணியில் இருந்தார். அதன் பிறகு பின்னடைவை சந்தித்தார்.

இறுதியாக 53 ஆயிரத்து 209 வாக்குகள் பெற்று வானதி சீனிவாசன் வெற்றி பெற்றார். கமல்ஹாசன் 51 ஆயிரத்து 481 வாக்குகள் பெற்று 2-ம் இடம் பிடித்தார். 42,383 வாக்குகள் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் மூன்றாம் இடம் பிடித்தார்.

கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், “மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். வாக்களித்த மக்களுக்கும், தேர்தல் களத்தில் தோள் கொடுத்த மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்களுக்கும், கூட்டணிக் கட்சியினருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

‘சீரமைப்போம் தமிழகத்தை’ என்பது ஒரு தேர்தலுக்கான கோஷம் அல்ல. அது மக்கள் நீதி மய்யத்தின் கனவு. மண், மொழி, மக்கள் காக்க தொடர்ந்து களத்தில் நிற்போம்” என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.