முதல்வராக போகும் மு.க.ஸ்டாலினுக்கு திரைப்பிரபலங்கள் வாழ்த்து

முதல்வராக போகும் மு.க.ஸ்டாலினுக்கு திரைப்பிரபலங்கள் வாழ்த்து

03 மே, 2021 – 13:48 IST

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. முதன்முறையாக முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்கிறார். அவருக்கும், அவர் தலைமையில் அமையவிருக்கும் ஆட்சிக்கும் திரைப்பட நட்சதிரங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அது வருமாறு:
ரஜினி: நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலின் கடும் போட்டியில், திறம்பட அயராது உழைத்து, வெற்றி அடைந்து இருக்கும் என்னுடைய அன்பு நண்பர் மதிப்பிற்குரிய மு.க. ஸ்டாலின் நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் இருந்து அனைத்து தரப்பு மக்களும் திருப்தி அடையும் வகையில் ஆட்சி செய்து, தமிழகத்தை வளமான மாநிலமாக மாற்ற பெரும் பேரும் புகழும் பெற வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன்.
கமல்: பெரும் வெற்றி பெற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள். மனப்பூர்வமான பாராட்டுகள். நெருக்கடியான காலகட்டத்தில் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்கிறீர்கள். சிறப்பாக செயல்பட்டு தமிழகத்தை வளர்ச்சி பாதையில் அழைத்துச் செல்ல வாழ்த்துக்கள்.விஷால்: அற்புதமான வெற்றியை பெற்றிருக்கும் திமுகவுக்கு வாழ்த்துக்கள். என் இனிய நண்பர்களான உதயநிதி ஸ்டாலின் மற்றும் அன்பில் மகேஷ் ஆகியோருக்கும், வாழ்த்துக்கள். நமது புதிய முதலமைச்சர் முகஸ்டாலினுக்கு நல்வரவு, அடுத்து வரும் ஆண்டுகளில் தமிழகம் நல்ல விஷயங்களோடு முன்னேறட்டும், அபாய நிலையில் இருக்கும் திரைத்துறைக்கு ஆக்ஸிஜன் கிடைக்கட்டும்.
ஏ.ஆர்.ரஹ்மான்: சமூக நீதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சியடைய, இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ, தி.மு.க கூட்டணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.
சித்தார்த்: ஜெயலலிதாவுக்கு பிறகு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள், நிறைய கேள்விகளுடனும், எதிர்பார்ப்புகளுடனும் காத்திருக்கிறோம்.
ஜெயம் ரவி: நமது புதிய முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் வெற்றிக்கு வாழ்த்துக்கள். சகோதரர் உதயநிதி அவர்களுக்கும் வாழ்த்துகள். இந்த கடினமான காலகட்டத்தில் உங்கள் ஆட்சியை அதிக எதிர்பார்ப்புகளோடு எதிர்நோக்கியிருக்கிறோம்.
விஷ்ணு விஷால்: முக ஸ்டாலின் தலைமையின் கீழ் தமிழகம் மக்களுக்கான, முற்போக்குக் கொள்கைகளைப் பார்க்கக் காத்திருக்கிறோம். உங்களது அட்டகாசமான வெற்றிக்கு வாழ்த்துக்கள் . உங்கள் தலைமையில் தமிழகம் செழிக்கும், சரியான திசையில் முன்னேறும் என்று நான் நம்பிக்கையாக இருக்கிறேன்.
சிபிராஜ்: நமது புதிய முதல்வர் முக ஸ்டாலினை கொண்டாட வேண்டிய, வரவேற்க வேண்டிய நேரம் இது. மனமார்ந்த வாழ்த்துக்கள் உதயநிதி, புதிய அரசுக்கு என் வாழ்த்துக்கள். உரித்தான வெற்றி.
பிரகாஷ்ராஜ்: உயரிய வெற்றி. வாழ்த்துக்கள் முக ஸ்டாலின். மாற்றத்துக்கான தீர்ப்பைத் தமிழக மக்கள் வழங்கியிருக்கின்றனர். மாற்றத்தைப் பார்ப்பேன் என்று நம்புகிறேன், விரும்புகிறேன். வாழ்த்துக்கள்.
விக்ரம் பிரபு: முக ஸ்டாலினுக்கும் , சகோதரர் உதயநிதிக்கும் மிகப்பெரிய வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் நிர்வாகத்தில் சிறந்த ஆண்டுகள் வரும் என்று விரும்புகிறேன்.
சூரி நேரில் வாழ்த்துசட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்கவுள்ள தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வென்ற உதயநிதி ஆகியோருக்கு நடிகர் சூரி நேரில் சென்று தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தார்.
தங்கர்பச்சான் : தமிழக முதல்வராக தேர்வாகும் திரு. ஸ்டாலின் அவர்களுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து சட்டசபை உறுப்பினர்களுக்கும் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள். ஸ்டாலின் அவர்கள் கடந்து வந்த போராட்டக் களங்களைக் காட்டிலும் முதல்வராக ஆட்சி செய்யப்போகும் இனிவரும் காலங்கள் தான் மிகுந்த சவால்கள் நிறைந்தது. வெறும் கை கால்களைக் கொண்டு ஒரு பெரும் குடும்பத்தை காப்பாற்றும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஒரு குடும்பத் தலைவனின் நிலைதான் அவரது நிலை. மாற்றத்தை விரும்பி வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் பயிற்சியும் ஆளுமையும் அவருக்கு இருக்கின்றன. ஆளும் கட்சி எதைச்செய்தாலும் அதை எதிர்க்காமல் தமிழகத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் பணியாற்றுங்கள். இதைத்தான் தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
கார்த்தி : மிக முக்கிய தருணத்தில், தமிழக முதல்வராகும் திரு. ஸ்டாலின் அவர்கள், நமது தனிப்பெரும் அடையாளங்களான சமூக நீதி, மத நல்லிணக்கம்,கல்வி, மருத்துவம், சுகாதாரத்தோடு, வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம் அளித்து, மக்கள் விரும்பும் நல்லாட்சி அமைத்திட வாழ்த்துக்கள்.
லிங்குசாமி : ” ஸ்டாலின் ஆகிய நான்” என்று சொல்லிப் பதவியேற்றாலும், “நாம்” என்று தான் நாடாளுவீர்கள் நீங்கள். முக.ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நல் வாழ்த்துகள். வெற்றி பெற்ற நண்பர் உதயநிதிக்கும் எனது வாழ்த்துக்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.