முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் பினராயி விஜயன்: கேரள ஆளுநரிடம் கடிதத்தை சமர்ப்பித்தார்!!

திருவனந்தபுரம் : கேரளாவில் இதுவரை எந்த கட்சியும் தொடர்ந்து ஆட்சிக்கு வந்தது இல்லை. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கூட்டணிகள் 5 ஆண்டுக்கு ஒருமுறை மாறிமாறி ஆட்சிக்கு வருவது வழக்கம். இந்த முறை நிலைமை மாறி இருக்கிறது. இடது முன்னணி 99 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 41 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. கடந்த 2016 தேர்தலில் இடது முன்னணி 91 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 47 தொகுதிகளிலும், பாஜ, ஜனபக்ஷம் கட்சிகள் தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றிருந்தன. இடது முன்னணியில் மார்க்சிஸ்ட் 67, இந்திய கம்யூனிஸ்ட் 17, கேரளா காங்கிரஸ் (எம்) 5, ஜனதா தள் (எஸ்), தேசியவாத காங்கிரஸ் தலா 2, எல்ஜேடி, காங்கிரஸ் (எஸ்), ேகரளா காங்கிரஸ் (பி), ஆர்எஸ்பி (எல்), ஜனநாயக கேரள காங்கிரஸ், ஐஎன்எல் ஆகியவை தலா ஒரு இடத்தையும் பிடித்துள்ளன. இந்த தேர்தலில் இடது முன்னணி 8 தொகுதிகளில் கூடுதலாக வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கூட்டணி 6 தொகுதிகளையும், பாஜ இருந்த ஒரே தொகுதியையும் இழந்துள்ளன. பெருவாரியான இடங்களில் வெற்றிபெற்றதை அடுத்து மீண்டும் இடது முன்னணி ஆட்சிக்கு வருகிறது. மீண்டும் பினராய் விஜயன் முதல்வர் ஆகிறார். இதன் மூலம் கேரளாவில் தொடர்ந்து 2வது முறையாக ஆட்சி அரியணையில் ஏறும் முதல் கட்சி என்ற பெருமை இடது முன்னணிக்கு கிடைத்து உள்ளது.இந்த நிலையில் தற்போதுள்ள அமைச்சரவை முறைப்படி ராஜினாமா செய்ய வேண்டும். அதன்படி முதல்வர் பினராயி விஜயன் இன்று கவர்னர் ஆரிப் முகமதுகானை சந்தித்து முறைப்படி ராஜினாமா கடிதத்தை அளித்தார். இதைத் தொடர்ந்து 2வது முறையாக ஆட்சியமைப்பது குறித்து பினராயி விஜயன் ஆலோசனை நடத்துகிறார். புதிய அமைச்சரவை பதவி ஏற்கும் நாள் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. இடது முன்னணி கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்படும். புதிய அமைச்சரவையில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.