மும்பைக்கு எதிராக 218 ரன்கள் குவித்தும் தோல்வி: ‘கேட்சை நழுவவிட்டதால் பாதிப்பு’ சென்னை கேப்டன் டோனி சொல்கிறார்

புதுடெல்லி, 
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு டெல்லியில் நடந்த திரிலிங்கான லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இ்ந்தியன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சை தோற்கடித்தது. இதில் முதலில் பேட் செய்த சென்னை அணி 4 விக்கெட்டுக்கு 218 ரன்கள் குவித்தது. பிளிஸ்சிஸ் (50 ரன்), மொயீன் அலி (58 ரன்), அம்பத்தி ராயுடு (72 ரன்) அரைசதம் அடித்தனர். இந்த கடின இலக்கை மும்பை அணி கடைசி பந்தில் எட்டிப்பிடித்தது. 200-க்கும் மேலான இலக்கை மும்பை அணி விரட்டிப்பிடித்திருப்பது இதுவே முதல் நிகழ்வாகும். கடைசி 10 ஓவர்களில் மட்டும் 138 ரன்கள் திரட்டி அசத்தினர். ஆல்-ரவுண்டர் கீரன் பொல்லார்ட் 87 ரன்கள் (34 பந்து, 6 பவுண்டரி, 8 சிக்சர்) விளாசி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

தோல்விக்கு பிறகு சென்னை கேப்டன் டோனி கூறுகையில், ‘இது பேட்டிங்குக்கு அற்புதமான ஒரு ஆடுகளம். பந்தை அடிப்பதற்கு எளிதாக இருந்தது. திட்டங்களை எப்படி செயல்படுத்துகிறோம் என்பதில் தான் இரு அணிகளுக்கு இடையிலான வித்தியாசமாக அமைந்தது. எங்களது பந்து வீச்சாளர்களுக்கு இது ஒன்றும் கடினமான வேலை கிடையாது. ஆனால் முக்கியமான கட்டத்தில் நழுவ விட்ட கேட்ச்கள் (பொல்லார்ட்டுக்கு 68 ரன்னில் பிளிஸ்சிஸ் கேட்ச் விட்டார்) பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த தோல்வியில் இருந்து பந்துவீச்சாளர்கள் கற்றுக்கொண்டு தங்களது தவறுகளை சரி செய்து கொள்ள வேண்டும். இத்தகைய தொடரில் இது போன்ற தோல்விகள் வரத்தான் செய்யும்.’ என்றார்.
மும்பை கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், ‘நான் பங்கேற்றதில் அனேகமாக மிகச்சிறந்த 20 ஓவர் போட்டிகளில் இதுவும் ஒன்று. இதற்கு முன்பு இது போன்ற சேசிங்கை பார்த்ததில்லை. பொல்லார்ட்டிடம் இருந்து வெளிப்பட்ட மிகச்சிறந்த இன்னிங்சில் இதுவும் ஒன்று. அவரது பேட்டிங்கை வெளியில் இருந்து பார்க்க அருமையாக இருந்தது. வீரர்கள் வெளிப்படுத்திய முயற்சி மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.