3-வது முறை: மேற்கு வங்க முதல்வராக மம்தா பானர்ஜி மே 5-ம் தேதி பதவியேற்பு

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி மூன்றாவது முறையாக மேற்கு வங்க மாநில முதல்வராக வரும் 5-ம் தேதி பதவியேற்க உள்ளார்.

மேற்கு வங்கத்தில் 292 தொகுதிகளுக்கும் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி 212 இடங்களில் வென்றது. ஆட்சி அமைக்க 148 எம்எல்ஏக்கள் இருந்தாலே போதுமானது. ஆனால், திரிணமூல் காங்கிரஸ் கட்சி 213 இடங்களில் வென்று அசுரபலத்துடன் 3-வது முறையாக ஆட்சியில் அமர்கிறது.

தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்குக் கடும் போட்டியளித்த பாஜக 77 இடங்களில் மட்டுமே வென்று எதிர்க்கட்சி வரிசையில் அமர்கிறது. மாநிலத்தில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையுடன் முதல்வர் மம்தா பானர்ஜி 3-வது முறையாக ஆட்சியமைக்க உள்ளார்.

ஆளுநர் தனகரை அவரின் மாளிகையில் மம்தா பானர்ஜி இன்று சந்திக்க உள்ளார். அப்போது மாநிலத்தில் புதிய ஆட்சி அமைக்க உரிமை கோருவார் எனத் தெரிகிறது

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பர்தா சாட்டர்ஜி இன்று நிருபர்களிடம் கூறுகையில், “மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. 3-வது முறையாக முதல்வராக வரும் 5-ம் தேதி மம்தா பானர்ஜி பதவி ஏற்க உள்ளார்” எனத் தெரிவித்தார்.

நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி, பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் 1,956 வாக்குகளில் தோல்வி அடைந்தார். இந்தத் தேர்தல் முடிவு குறித்து நீதிமன்றத்தில் முறையிடப்போவதாக மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

இருப்பினும், எம்எல்ஏ ஆகாமல் முதல்வராகப் பதவி ஏற்று 6 மாதங்கள் செயல்படலாம். அதற்குள் ஏதாவது ஒரு தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டு வெல்ல வேண்டும். அதன் அடிப்படையில் முதல்வராக மம்தா பானர்ஜி வரும் 5ஆம் தேதி பதவியேற்க உள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.