`அதிர்ஷ்டத்தால் முதல்வரானவர் எடப்பாடி; முன்னேறி முதல்வராகிறார் ஸ்டாலின்!'- கருணாஸ் கலகல!

“அதிர்ஷ்டத்தில் வந்தவர்கள் சிலர் முதல்வர் ஆனார்கள். ஆனால், அடிமட்ட தொண்டனிலிருந்து படிப்படியாக முன்னேறி இன்று முதல்வராகப் பொறுப்பேற்க இருக்கிறார் ஸ்டாலின். எங்களது சமுதாயத்தை அ.தி.மு.க அரசு புறக்கணித்ததால் தான் அவர்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது” என்று அ.தி.மு.க-வினரை விமர்சனம் செய்தார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ்.

முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவர் கருணாஸ்.

முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவர் கருணாஸ் திருச்சியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். “நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான முக்குலத்தோர் சமுதாயத்தை அ.தி.மு.க அரசு தொடர்ந்து புறக்கணித்தது. அதனால் அந்த சமுதாய மக்களின் கோபம் அ.தி.மு.க-வுக்கு எதிரான வாக்குகளாக மாறியுள்ளது. முக்குலத்தோர் சமுதாயத்தை ஒன்றிணைத்து தேவர் என அழைக்கவேண்டும் என்று அரசு உத்தரவு நிறைவேற்றப்படாமல் அப்படியே கிடப்பில் உள்ளது. இதுபோல் 12 அம்சக் கோரிக்கைகளை நான் அ.தி.மு.க அரசிடம் பலமுறை கொடுத்துள்ளேன்.

அதுகுறித்து வலியுறுத்தியதோடு பல போராட்டங்களையும் நடத்தியிருக்கிறேன். ஆனால் அ.தி.மு.க அரசு அதையெல்லாம் நிறைவேற்றவில்லை. தற்பொழுது தி.மு.க தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளார். அவருக்கு எனது வாழ்த்துக்கள்.

பத்திரிக்கையாளர்களை சந்தித்த கருணாஸ்

தென் மாவட்டங்களில் தி.மு.க வெற்றி பெற்றது தொடர வேண்டும் என்றால் முக்குலத்தோர் சமுதாயத்தின் 12 அம்சக்கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். அப்படி அவர் நிறைவேற்றிக் கொடுத்தால் எனது வாழ்நாள் முழுவதும் அவருக்கு விசுவாசமாக இருப்பேன். இதில் எந்த மாற்றமும் இல்லை.

நடந்துமுடிந்த தேர்தல் ஜனநாயகத் தேர்தல் அல்ல, பணநாயக தேர்தல். பணம் கொடுக்கவில்லை எனப் பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டது இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் நடந்தது. இது வெட்கக்கேடான சம்பவம். இது அடுத்த தலைமுறையினர் மத்தியில் அரசியல் ஒரு வியாபாரம் என்ற நிலைக்குத் தள்ளும். இதையும் தாண்டி 40 லட்சம் பேர் நேர்மையாக வாக்களித்துள்ளனர்.

கருணாஸ்

அந்த வாக்காளர்களின் பாதங்களைத் தொட்டுக் கழுவுவேன். அவர்களது ஜனநாயகக் கடமையை சரியாகச் செய்துள்ளார்கள். அ.தி.மு.க தோல்விக்கு முக்கியக் காரணம் எங்களது சமுதாயம் தான். அனைவருக்கும் சம உரிமை வழங்க வேண்டும்” என்றார்.

இனிவரும் காலங்களில் அ.தி.மு.க-வின் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு, “அக்கட்சி விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை. அதிர்ஷ்டத்தில் வந்தவர்கள் சிலர் முதல்வர் ஆனார்கள்” என்று எடப்பாடியை மறைமுகமாகப் பேசினார். “தற்பொழுது அடிமட்ட தொண்டனிலிருந்து படிப்படியாக முன்னேறி இன்று முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்க உள்ளார். அவருக்கு எது நல்லது கெட்டது என்கிற களநிலவரம் தெரியும்” என கூறினார்.

Also Read: தஞ்சாவூர்: `கட்சி நிர்வாகிகள் விலை போனதே தோல்விக்கு காரணம்!’ – திமுக வேட்பாளர் காட்டம்

அ.தி.மு.க-வில், சசிகலா மீண்டும் தலைவராக வாய்ப்பு உள்ளதா என்று கேட்டதற்கு, “அவர் அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்து விட்டார். அந்த கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். இதில் நான் கருத்துச் சொல்லமுடியாது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.