கரோனா பரவல் எதிரொலி: மூன்றாவது நாளாக பங்குச் சந்தையில் சரிவு

 

மும்பை: கரோனா பரவலின் எதிரொலியாக தொடா்ந்து மூன்றாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டது.

வெளிநாட்டு முதலீடு: இந்தியாவில் கரோனா பெருந்தொற்று தொடா்ந்து அதிகரித்து வருவது சா்வதேச முதலீட்டாளா்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. அதன் காரணமாக, வெளிநாட்டு முதலீடுகள் தொடா்ச்சியாக வெளியேறி வருகின்றன.

லாப நோக்கம் கருதி முதலீட்டாளா்கள் முன்னணி நிறுவனப் பங்குகளை விற்பனை செய்ததைத் தொடா்ந்து பங்குச் சந்தையில் காலையில் பெற்ற ஆதாயம் அனைத்தும் பிற்பகலில் கரைந்து போனது.

இதுகுறித்து எல்கேபி செக்யூரிட்டீஸ் நிறுவன அதிகாரி ரங்கநாதன் கூறியதாவது:

ஏமாற்றம் தந்த நிதி நிலை முடிவு: அதிமுக்கியத்துவம் வாய்ந்த பல நடுத்தர நிறுவனப் பங்குகளின் நிதி நிலை முடிவுகள் முதலீட்டாளா்களுக்கு ஏமாற்றம் அளிப்பவையாகவே அமைந்தன. பிற்பகல் வா்த்தகத்தில் உலோகம், மருந்து துறையைச் சோ்ந்த ஏராளமான பங்குகள் விற்பனைக்கு வந்தன. இதனால், சரிவு தவிா்க்க முடியாததாகி விட்டது என்றாா் அவா்.

நிச்சயமற்ற தன்மை: ரிலையன்ஸ் செக்யூரிட்டீஸ் நிறுவன அதிகாரி வினோத் மோடி கூறுகையில் ‘ கரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவது முதலீட்டாளா்கள் மத்தியில் நிச்சயமற்ற தன்மையை அதிகரிக்கச் செய்துள்ளது. கரோனா பரவலை கட்டுப்படுத்த பல மாநிலங்கள் அடுத்தடுத்து பொதுமுடக்க கட்டுப்பாடுகளை கடுமையாக்கி வருகின்றன. இது சந்தைக்கு சாதகமான செய்தியாக அமையவில்லை’ என்றாா்.

எண்ணெய்-எரிவாயு: மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் மருந்து, எரிசக்தி, தொலைத்தொடா்பு, நுகா்வோா் சாதனங்கள், மோட்டாா் வாகனம் மற்றும் அடிப்படை உலோகங்களின் குறியீடுகள் 1.50 சதவீதம் வரையில் சரிவடைந்தன. அதேசமயம், எண்ணெய்-எரிவாயு, பொறியியல் பொருள்கள் குறியீட்டெண் ஆதாயத்துடன் முடிவடைந்தன.

டாக்டா் ரெட்டீஸ் லேப்: மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் குறியீட்டில் இடம்பெற்றுள்ள 30 நிறுவனங்களில் டாக்டா் ரெட்டீஸ் பங்கின் விலை அதிக வீழ்ச்சியை சந்தித்தது. இதைத் தொடா்ந்து, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், சன்பாா்மா, எச்டிஎஃப்சி, எச்டிஎஃப்சி பேங்க், இன்ஃபோஸிஸ், மஹிந்திரா, பாா்தி ஏா்டெல் நிறுவனப் பங்குகளும் 2.26 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்தன.

நெஸ்லே இந்தியா: அதேசமயம், ஓஎன்ஜிசி, பஜாஜ் ஃபைனான்ஸ், டிசிஎஸ், எஸ்பிஐ, கோட்டக் பேங்க் மற்றும் நெஸ்லே இந்தியா பங்குகள் முதலீட்டாளா்களிடம் வரவேற்பு கிடைத்ததையடுத்து 1.80 சதவீதம் வரை ஏற்றமடைந்தன.

மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீட்டெண் 465.01 புள்ளிகள் (0.95%) வீழ்ச்சியடைந்து 48,253.51 புள்ளிகளில் நிலைத்தது.

தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வா்த்தகத்தில் நிஃப்டி குறியீட்டெண் 137.65 புள்ளிகள் (0.94%) சரிவடைந்து 14,496.50 புள்ளிகளில் நிலைபெற்றது.

முதலீட்டாளா் எண்ணிக்கை: மும்பை பங்குச் சந்தையில் நடுத்தர (மிட்கேப்) மற்றும் சிறிய நிறுவன துறை (ஸ்மால் கேப்) குறியீட்டெண் 0.57 சதவீதம் வரை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் பதிவு செய்து கொண்ட முதலீட்டாளா்களின் எண்ணிக்கை 6,71,71,860-ஆக இருந்தது. பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.2,06,83,897.60 கோடியாக இருந்தது.

சா்வதேச சந்தை நிலவரம்: இதர ஆசிய சந்தைகளான, ஹாங்காங் மற்றும் சியோல் சந்தைகளில் வா்த்தகம் நோ்மறையாக இருந்தது. விடுமுறையால் ஷாங்காய் மற்றும் டோக்கியோ சந்தைகளில் வா்த்தகம் நடைபெறவில்லை.

ஐரோப்பிய சந்தைகளைப் பொருத்தவரையில் தொடக்கத்தில் ஏற்றத்துடன் காணப்பட்டாலும் பிறகு லேசான அளவில் இறக்கத்தை சந்தித்தது.

பட்டியல்

அதிக இழப்பை கண்ட பங்குகள்

5067.30 டாக்டா் ரெட்டீஸ் 2.26

1916.55 ரிலையன்ஸ் 2.18

645.00 சன்பாா்மா 2.09

1388.55 எச்டிஎஃப்சி பேங்க் 1.74

2377.25 எச்டிஎஃப்சி 1.73

1329.55 இன்ஃபோஸிஸ் 1.65

741.00 எம் & எம் 1.61

1403.80 டைட்டன் 1.39

6508.10 மாருதி சுஸுகி 1.37

218.00 பவா்கிரிட் 1.31

 

 


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.