இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 கோடியை கடந்திருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3 லட்சத்து 57 ஆயிரத்து 229 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 2 கோடியே 2 லட்சத்து 82 ஆயிரத்து 833 ஆக அதிகரித்துள்ளது. 

அதேபோல் கடந்த 24 மணிநேரத்தில் 3,449 பேர் உயிரிழந்ததையடுத்து, மொத்த உயிரிழப்பு 2 லட்சத்து 22 ஆயிரத்து 408 ஆக உயர்ந்தள்ளது. தற்போது 34 லட்சத்து 47 ஆயிரத்து 133 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். நாட்டில் கொரோனாவில் இருந்து ஒரு கோடியே 66 லட்சத்து 13 ஆயிரத்து 292 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை 15 கோடியே 89 இலட்சத்து 32 ஆயிரத்து 921 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

இப்படி நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இந்த இக்கட்டான சூழ்நிலையை கட்டுப்படுத்த மத்திய அரசும் பல்வேறு கட்டுப்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் முழு ஊரடங்கு என பல்வேறு கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. 

ஏற்கனவே கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக பல மாதங்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் நாட்டில் ஏழை, எளிய மக்கள் கடும் பாதிப்புகளை சந்தித்ததோடு, நாட்டின் பொருளாதாரமும் பாதிப்புள்ளானது. எனவே கொரோனா 2வது அலையை முழு ஊரடங்கு இல்லாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. 

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், கொரோனாவைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு மட்டுமே தீர்வு என யோசனை கூறியுள்ளார். மேலும் மத்திய அரசின் செயலற்ற தன்மையால் பல அப்பாவி மக்கள் உயிரிழப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.  பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்கள் பாதிக்கப்படாத வகையில், ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமான திட்டத்தை அறிவித்துவிட்டு முழு ஊரங்கை அமல்படுத்தலாம் என ஆலோசனை கூறியுள்ளார்.