கொரோனா 2ம் அலை: அதிகரிக்கும் வேலை இழப்பு| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்துள்ளது. தினமும் 3 லட்சம் பேர் புதிதாக வைரஸ் தொற்றிற்கு ஆளாகின்றனர். இதனால் பல்வேறு மாநிலங்களும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றன. இதனால், முறைசார தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்து வருகின்றனர். குறிப்பாக முன் எப்போதும் இல்லாத வகையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் வேலையின்மையின் விகிதம் 8 சதவீதத்தை எட்டியுள்ளது. வைரசின் தாக்கம் அதிகரிப்பதால், வேலையின்மையின் விகிதம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இதுகுறித்து, சென்டர் பார் மானிட்டரிங் இந்தியன் எகனாமி பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலையால் இந்தியாவில் வேலையின்மை மார்ச் மாதத்தில் 6.5 சதவீதமாக இருந்தது. தொற்று அதிகரித்துள்ளதால் ஏப்ரலில் 7.97 சதவீதமாக அதிகரித்துள்ளது. வைரஸ் இன்னும் தீவிரமாகப் பரவுவதால் மே மாதத்தில் வேலையிழப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக, 70 லட்சம் பேர் வேலை இழப்பை சந்திக்கவுள்ளனர்’ எனத் தெரியவந்துள்ளது.


latest tamil news

‘ஊரடங்கின் காரணமாக முறைசாரா தொழிலாளர்களுக்கு கிடைக்கக்கூடிய வேலைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதைப் பொருட்படுத்தவில்லை என்றால் நாட்டில் தொழிலாளர்களின் இடப் பெயர்வு அதிகரிக்கும். பஞ்சமும் பட்டினிச் சாவும் ஏற்படும். கொரோனா தொற்றும் அதிகரிக்கும்’ என, பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.