சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் படுக்கைகள் நிரம்பியது: ஆம்புலன்சில் வைத்து சிகிச்சை

சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் படுக்கைகள் நிரம்பியதால் புதிதாக வரும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டரோடு ஆம்புலன்சில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஆத்தூர் சுகாதார மாவட்டத்தை உள்ளடக்கிய சேலம் ஒருங்கிணைந்த மாவட்டம் அளவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நேற்று ஒருநாள் மட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 600ஐ கடந்துள்ளது. இந்நிலையில் சேலம் அரசு மருத்துவமனைக்கு தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் வந்த வண்ணம் இருக்கின்றனர். இங்கு இருக்கக்கூடிய கொரோனா வார்டில் 650 படுகைகளில் 500 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் செயல்பட்டு வருகின்றன. அவை அனைத்தும் நிரம்பியுள்ள நிலையில் மேற்கொண்டு கூடுதலாக நோயாளிகள் வரக்கூடிய நிலையில் 150 படுக்கைகள் கூடுதலாக தயார் செய்யப்பட்டன. அவை அனைத்தும் உடனடியாக நிரம்பிவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் சேலம் அரசு மருத்துவமனை வளாகம் தொடர்ந்து ஆம்புலன்ஸ் சைரன் ஒலியோடு உள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு போதிய அளவு ஆக்சிஜன் சிலிண்டர் கிடைக்கவில்லை என்பது பிரதான பிரச்சனையாக உள்ளது. இந்நிலையில் தனியார் மருத்துவமனைகளில் இருந்து அரசு மருத்துவமனைகளுக்கு நோயாளிகள் அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றனர். இதனால் அவர்கள் வரக்கூடிய ஆம்புலன்ஸிலேயே வைத்து சிகிச்சை அளிக்கக்கூடிய நிலை தான் உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.