நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று தமிழகத்தின் முதலமைச்சராக பதவி ஏற்கவுள்ள தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் “செய்தித்தாள், காட்சி , ஒலி ஊடகங்களில் பணியாற்றுவோர் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள்” என அறிவித்துள்ளார். 

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 234  தொகுதிகளில் திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க 118 இடங்களே போதும் என்ற நிலையில், திமுக மட்டுமே தனித்து 126 தொகுதிகளில் வெற்றி பெற்றது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 4 மதிமுக, 2 மனிதநேய மக்கள் கட்சி, 1 தமிழக வாழ்வுரிமை கட்சி, 1 கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியோரும் திமுக உறுப்பினர்களாகவே சட்டப்பேரவையில் கருதப்படுவார்கள். எனவே சட்டப்பேரவையில் திமுகவின் பலம் 134 ஆக இருக்கும். இதன்மூலம் திமுக தமிழகத்தில் அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது.

விரைவில் தமிழக முதல்வர் பதவியை ஏற்க உள்ள நிலையில்… ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “கடும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும், பெருந்தொற்றிலும் உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் ஊடகத் துறையினர் முன்களப் பணியாளர்களாகத் தமிழகத்தில் கருதப்படுவார்கள். செய்தித்தாள்கள், காட்சி ஊடகங்கள், ஒலி ஊடகங்கள் போன்றவற்றில் பணியாற்றி வருகின்ற தோழர்கள் அனைவருமே இந்த வரிசையில் அடங்குவார்கள். முன்களப் பணியாளர்களுக்கான உரிமைகளும், சலுகைகளும் அவர்களுக்கு உரிய முறையில் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

இதையடுத்து தமிழக முதல்வராக பதவி  ஏற்கப் போகும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு  தமிழ்நாடு பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் சங்கம் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. கடுமையான நேரங்களில் கூட செய்திகளை மக்களிடம் உடனுக்குடன் கொண்டு சேர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் தலையாய பணியை ஊடகங்கள் மேற்கொண்டு வருகின்றன, இந்த பணியை மேற்கொள்ளும் பத்திரிகையாளர்களை முன்களப்பணியாளர்கள் என ஸ்டாலின் அறிவித்துள்ளது பத்திரிகை துறை சேர்ந்தவர்களை பெருமைப்படுத்தும் விதத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.