மகிழ்ச்சி; 25 ஆண்டிற்கு பிறகு ஆளும் கட்சி வசமானதால்…வளர்ச்சியை எதிர்பார்க்கும் ரிஷிவந்தியம் மக்கள்

ரிஷிவந்தியம்; ரிஷிவந்தியம் தொகுதி 30 ஆண்டுகளுக்கு பிறகு ஆளும் கட்சி வசம் சென்றுள்ளதால் இனி வேகமாக வளர்ச்சி அடையும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் ரிஷிவந்தியம் தொகுதி உள்ளது. மணலுார்பேட்டை பேரூராட்சி மற்றும் 135 கிராமங்களை உள்ளடக்கியதாக உள்ளது.இத்தொகுதி கடந்த 30 ஆண்டுகளாக ஆளும் கட்சி கூட்டணி அல்லது எதிர்க்கட்சி எம்.எல்.ஏ., க்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தனர்.கடந்த 1991 ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., வேட்பாளர் கோவிந்தராஜ் எம்.எல்.ஏ., வாக வெற்றி பெற்றார்.

இத்தேர்தலில் அ.தி.மு.க., ஆட்சியை பிடித்ததால் 5 ஆண்டுகள் ஆளும் கட்சி வசம் இத்தொகுதி இருந்தது. இதனால் அரசின் பல்வேறு திட்டங்கள் இத்தொகுதியில் செயல்படுத்தப்பட்டது. அதன் பிறகு சிவராஜ் 3 முறை வெற்றி பெற்ற போதும் அப்போதைய ஆளும் கட்சியின் கூட்டணியில் அங்கம் வகித்த காங்., மற்றும் த.மா.கா., வேட்பாளராக களமிறங்கி எம்.எல்.ஏ., வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.கடந்த 2011 ம் ஆண்டு தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் இத்தொகுதியில் வெற்றி பெற்று எதிர்க்கட்சித் தலைவரானார். அந்தத்தேர்தலில் ஆட்சியைப் பிடித்த அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., இருந்தபோதிலும் சில மாதங்களிலேயே உறவு முறிந்தது. இதனால் விஜயகாந்த் வெற்றி பெற்றதும் தொகுதி பன்மடங்கு வளர்ச்சியடையும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த மக்கள் ஏமாற்றமடைந்தனர்.அதைத்தொடர்ந்து 2016ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க., சார்பில் போட்டியிட்டு வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் கடந்த 25 ஆண்டுகளாக நடந்த 5 சட்டசபை தேர்தலிலும் ஆட்சியை பிடிக்கும் கட்சியின் எம்.எல்.ஏ., யாரும் இங்கு தேர்வு செய்யப்படவில்லை.

இதுவே இத்தொகுதி வளர்ச்சி அடையாமல் போனதற்கு முக்கிய காரணம் என மக்கள் ஆதங்கப்பட்டனர். இந்நிலையில் தற்போது தி.மு.க., வேட்பாளராக போட்டியிட்டு வசந்தம் கார்த்திகேயன் வெற்றிபெற்றுள்ளார். தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் தி.மு.க., ஆட்சியைப் பிடித்துள்ளதாலும், ரிஷிவந்தியம் தொகுதி 25 ஆண்டுகளுக்கு பிறகு ஆளும் கட்சியை சேர்ந்த வேட்பாளரை எம்.எல்.ஏ., வாக தேர்ந்தெடுத்தது மக்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.இதனால் வரும் 5 ஆண்டுகளில் ரிஷிவந்தியம் தொகுதி அனைத்து வகையிலும் வேகமாக வளர்ச்சியடையும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.