மக்களின் உயிர் பிரச்னை ஆக்சிஜன் கேட்டு நாடே கதறியும் கண்டுகொள்ளாமல் இருப்பதா?: மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் கண்டனம்

புதுடெல்லி:  டெல்லிக்கு தினசரி 480 மெட்ரிக் டன் ஆக்சிஜனை மத்திய அரசு தற்போது வழங்கி வருகிறது. ஆனால், நாள் ஒன்றுக்கு சுமார் 700 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவை உள்ளது. இதுகுறித்த டெல்லி அரசின் கோரிக்கையை ஏற்று  தினசரி 700 மெட்ரிக் டன் ஆக்சிஜனை வழங்க வேண்டும் என கடந்த ஏப்ரல் 30ம் தேதியன்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து டெல்லி உயர் நீதிமன்றமும் டெல்லிக்கு  தினசரி 700  மெட்ரிக் டன் ஆக்சிஜன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.ஆனாலும், இதுவரை வழங்கப்படவில்லை. தினசரி 480 டன்னுக்கும் குறைவாகவே வழங்கப்பட்டு வருகிறது. இதனை உயர் நீதிமன்றத்தில் இதுதொடர்பாக நடந்து வரும் வழக்கில் டெல்லி அரசு சுட்டிக்காட்டியது. 5 மணி நேரம் நடந்த நீண்ட  விவாதத்திற்கு பிறகு இதுகுறித்து உயர் நீதிமன்ற நீதிபதிகள் விபின் சாங்கி மற்றும் ரேகா பாலி அமர்வு  கேள்வி எழுப்பியபோது, “தற்போதுள்ள மருத்துவ உள்கட்டமைப்பின் படி டெல்லிக்கு 700 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்ஸிஜனைப் பெற  உரிமை இல்லை” என மத்திய அரசு தெரிவித்தது. இதனை ஏற்க மறுத்து வாதத்தை தள்ளுபடி செய்த நீதிபதிகள், ‘ஆக்சிஜன் கேட்டு நாடே கதறுகிறது. மத்திய அரசு கண்டு கொள்ளாமல் இருக்கலாம். ஆனால், நாங்கள் அவ்வாறு   இருக்கமுடியாது. டெல்லிக்கு 700 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வழங்க மறுத்து, நீங்கள் வேண்டும் என்றால் உங்கள் தலையை தீக்கோழியை போன்று மண்ணுக்குள் புதைத்துக்கொண்டு எதையும் பார்க்கமாட்டேன் என்று கூறலாம்.நாங்கள் அப்படி  இருக்க மாட்டோம். நீங்களும் இந்த நகரத்தின் அங்கம் தானே?. இங்குள்ள நிலைமையை நீங்கள் பார்க்க மாட்டீர்களா?. இல்லை, எதையும் நீங்கள் பார்க்க விரும்பவில்லையா?. நீங்கள் மட்டும் என்ன ஐவரி டவரின் மீது வசிக்கிறீர்களா?   மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் அல்லது ஐ.சி.யூ படுக்கைகள் வழங்க முடியாத நிலையில், மக்களின் அன்றாட பயங்கரமான யதார்த்தத்தை நாங்கள் காண்கிறோம். ஆக்சிஜன்  பற்றாக்குறையால் மருததுவமனைகள்  படுக்கைகளைக்  குறைத்துள்ளன. இந்தபிரச்னைக்கு எல்லாம் டெல்லி அரசு தான் காரணம். முதலில் அவர்கள் குறைவான ஆக்சிஜன் கேட்டார்கள். அதனால்தான் மக்கள் இப்போது கடுமையாக அவதிப்படுகிறார்கள். இப்போது மத்திய அரசு அதை மாற்றி  அமைக்க மறுக்கிறது. மக்கள் சாக அனுமதிக்கிறது. அவமதிப்பு என்பது எங்கள் மனதில் கடைசி விஷயம் என்று நாங்கள் உங்களுக்குச் சொல்லியிருந்தோம். அது எங்கள் மனதில் உறுதியாக இருக்கிறது. அந்த கடைசி கட்டத்திற்கு எங்களை தூண்ட வேண்டாம். இப்போதைய அசாதாரண சூழலை  நாம் கவனிப்போம். இதுவரை நடந்தது போதும், போதும். இது குறித்து தெளிவாக இருங்கள். நாங்கள் ஒரு பதிலுக்காக காத்திருக்கப்போவதில்லை. நீங்கள் 700 மெட்ரிக் டன் வழங்க மாட்டீர்கள். ஏனெனில் இதுபற்றி ஏற்கனவே உச்ச நீதிமன்றம்  ஆணையிட்டுள்ளது. நாங்களும் இப்போது அதை தெரிவித்து இருக்கிறோம். எனவே போதுமான ஆக்சிஜன் வழங்கப்படும் என்ற தகவலை தவிர வேறு எதையும் நாங்கள் கேட்க விரும்பவில்லை. எனவே, டெல்லிக்கு ஆக்சிஜன் வழங்கக்கோரிய  உத்தரவை பின்பற்ற தவறியதற்காக மத்திய அரசு மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கூடாது என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும். இதற்காக பியூஷ்கோயல், மத்திய அரசின் மூத்த அதிகாரி சுமிதா தவரா ஆகியோர்  நாளை(இன்று) நீதிமன்றத்திற்கு நேரில் வந்து விளக்க அளிக்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.