முதல்-அமைச்சர் பதவிக்கு போட்டியிடவில்லை; புதுச்சேரி மாநில பா.ஜ.க. பொறுப்பாளர் பேட்டி

ஆலோசனை கூட்டம்

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் முடிவில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணி 16 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த கூட்டணியில் இடம்பெற்று இருந்த அ.தி.மு.க. 5 இடங்களில் போட்டியிட்ட போதிலும் ஒரு இடம்கூட கிடைக்காமல் தோல்வியை தழுவியது. இந்தநிலையில் பா.ஜ.க. கட்சி அலுவலகத்தில் நேற்று புதிய எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மத்திய மந்திரி அர்ஜூன் ராம் மேக்வால், மாநில பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, மாநில தலைவர் சாமிநாதன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் முடிவில் பா.ஜ.க மாநில பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா நிருபர்களிடம் கூறியதாவது:-

பா.ஜ.க. வளர்ச்சி

நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க., என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மை இடங்களை பெற்றுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் புதுவை சட்டசபையில் பா.ஜ.க.வுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.

2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற கொள்கையுடன், காங்கிரஸ் இல்லாத புதுச்சேரியை உருவாக்க வேண்டும் என்று தீவிரமாக பணியாற்றினோம். அதன் பயனாக அமைச்சரவையில் இடம்பெறும் அளவுக்கு பா.ஜ.க. வளர்ச்சி அடைந்துள்ளது. தேர்தல் முடிவின் மூலம் காங்கிரஸ் ஆட்சியில் மக்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அறிய முடிகிறது.

சிறப்பான ஆட்சி

பிரசாரத்துக்காக பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்‌ஷா ஆகியோர் 2 முறை புதுவைக்கு வந்தனர். அப்போது புதுவையை ஒரு முன்மாதிரி மாநிலமாக மாற்றுவோம். மத்திய அரசின் திட்டங்கள் கொண்டு வரப்படும் என்று அவர்கள் உறுதியளித்தனர்.

புதுவையில் பா.ஜ.க., என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைய உள்ளது. 5 ஆண்டுகளில் சிறப்பாக மக்கள் நலத்திட்டங்கள் கொண்டு வரப்படும். புதுச்சேரி முதன்மை மாநிலமாக மாற்றப்படும்.

பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் இந்த ஆட்சியில் நிறைவேற்றப்படும். பா.ஜ.க., என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்த அனைவருக்கும், தேர்தலுக்காக உழைத்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

போட்டி இல்லை

பா.ஜ.க., என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? என்று கேட்ட போது, தேசிய ஜனநாயக கூட்டணி (பா.ஜ.க., என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க). ரங்கசாமி தலைமையில் தான் தேர்தலை சந்தித்து மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. எனவே நான் அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினேன். முதல்-அமைச்சர் பதவிக்கு பா.ஜ.க போட்டியிடவில்லை என்றார்.

பேட்டியின் போது எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், ஏம்பலம் செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.