மும்பை – ஹைதராபாத் இன்று மோதல்

புது தில்லி: ஐபிஎல் போட்டியின் 31-ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் செவ்வாய்க்கிழமை களம் காண்கின்றன. 
கடைசி இரு ஆட்டங்களில் வென்றுள்ள மும்பை, இதிலும் வாகை சூடி “ஹாட்ரிக்’ வெற்றி பெறும் முனைப்பில் இருக்கிறது. தடுமாற்றத்துடன் இருக்கும் ஹைதராபாதை எதிர்கொள்வது அதற்கு சவாலாக இருக்காதெனத் தெரிகிறது. 
பேட்டிங்கைப் பொருத்தவரை டாப் ஆர்டர் சோபிக்கத் தவறியதே இல்லை. ரோஹித்தும், டி காக்கும் வலுவான அடித்தளம் அமைக்கின்றனர். சற்று கவலை அளிப்பதாக இருந்த மிடில் ஆர்டரும் கடைசி இரு ஆட்டங்களில் மீளத் தொடங்கியுள்ளது. அதிலும் சென்னைக்கு எதிரான பொல்லார்டின் ஆட்டம் அதற்கு நல்லதொரு சான்று. 
பாண்டியா சகோதரர்கள், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சற்று முன்னேற்றம் காட்டலாம். பெளலிங்கில் பும்ரா, போல்ட் ஆகியோர் டெத் ஓவர்களில் மிரட்டல் காட்டுகின்றனர். கிருணால் பாண்டியா விக்கெட் வீழ்த்தினால், சுழற்பந்துவீச்சில் வலு சேர்க்கும் ராகுல் சாஹருக்கு பணிச்சுமை சற்று குறையும். 
ஹைதராபாதைப் பொருத்தவரை, ஹாட்ரிக் தோல்வி கண்ட நிலையில் இந்த ஆட்டத்துக்கு வருகிறது. கேப்டன் மாற்றப்பட்ட கடைசி ஆட்டத்திலும் 55 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருப்பது கவலைக்குரியதாக இருக்கிறது. 
இந்த அணி டாப் ஆர்டரை மட்டுமே முழுதாக நம்பியிருக்கிறது. வார்னர் இல்லாத நிலையில் மணீஷ், பேர்ஸ்டோ, வில்லியம்சன் வரிசை தொடரும் பட்சத்தில் பொறுப்பை உணர்ந்து ரன்கள் குவிக்க வேண்டிய நிலையில் அவர்கள் இருக்கின்றனர். 
தொடர்ந்து மிடில் ஆர்டரில் வரும் விஜய் சங்கர், கேதார் ஜாதவ், அப்துல் சமத் உள்ளிட்டோர், டாப் ஆர்டர் தவறும் பட்சத்தில் நெருக்கடியை சமாளித்து ரன்கள் சேர்க்க  வேண்டும். பெளலிங்கில் ரஷீத் கான் தவறாமல் பங்களிப்பு செய்கிறார். பிளேயிங் லெவனுக்குத் திரும்பியிருக்கும் புவனேஷ்வர் குமார் தனது பழைய ஃபார்மை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். 

மும்பை இண்டியன்ஸ் 

ரோஹித் சர்மா (கேப்டன்), 
ஆடம் மில்னே, ஆதித்யா தாரே, 
அன்மோல்பிரீத் சிங், அனுகுல் ராய், 
அர்ஜுன் டெண்டுல்கர், கிறிஸ் லின், 
தவல் குல்கர்னி, ஹார்திக் பாண்டியா, இஷான் கிஷண், ஜேம்ஸ் நீஷம், 
ஜஸ்பிரீத் பும்ரா, ஜெயந்த் யாதவ், 
கிரன் பொல்லார்ட், கிருணால் பாண்டியா, மார்கோ ஜென்சென், மோசின் கான், 
நேதன் கோல்டர்நீல், பியூஷ் சாவ்லா, 
குவின்டன் டி காக், ராகுல் சாஹர், 
செளரவ் திவாரி, சூர்யகுமார் யாதவ், 
டிரென்ட் போல்ட், யுத்வீர் சிங்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 

கேன் வில்லியம்சன் (கேப்டன்), 
டேவிட் வார்னர், விராட் சிங், 
மணீஷ் பாண்டே, பிரியம் கர்க், 
ரித்திமான் சாஹா, ஜானி பேர்ஸ்டோ, ஜேசன் ராய், ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி,
 விஜய் சங்கர், முகமது நபி, 
கேதார் ஜாதவ், 
ஜெகதீசா சுசித், ஜேசன் ஹோல்டர், 
அபிஷேக் சர்மா, அப்துல் சமத், 
புவனேஷ்வர் குமார், ரஷீத் கான், 
சந்தீப் சர்மா, கலீல் அகமது, 
சித்தார்த் கெளல், பாசில் தாம்பி, 
ஷாபாஸ் நதீம், முஜீப் உர் ரஹ்மான்

நேருக்கு நேர்

இரு அணிகளும் ஐபிஎல் தொடரில் இதுவரை 17 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில், மும்பை 9 ஆட்டங்களிலும், ஹைதராபாத் 8 ஆட்டங்களிலும் வென்றுள்ளன.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.