15 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து குதித்தபடி பட்டாசுகளுடன் வாணவேடிக்கை நடத்திய 20 ஸ்கை டைவிங் வீரர்கள்; துபாய் குளோபல் வில்லேஜ் கண…

குளோபல் வில்லேஜ் கண்காட்சி

துபாயில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கான சிறந்த பொழுதுபோக்கு மையமாக குளோபல் வில்லேஜ் கண்காட்சி வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளின் அரங்குகள் உள்ளன. அதில் ஆண்டுதோறும் அந்த நாடுகளின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், கட்டுமான மாதிரிகள், உணவு வகைகள், உடைகள், திருவிழாக்கள் என அனைத்தும் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு 25-வது சீசனுக்காக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் திறக்கப்பட்ட அந்த கண்காட்சியில் வெள்ளி விழா கொண்டாட்டங்கள் நடைபெற்று வந்தது. அதன்படி மொத்தம் 25 கின்னஸ் சாதனைகளை நிகழ்த்த முடிவு செய்யப்பட்டது.

வாணவேடிக்கை

ஏற்கனவே 24 கின்னஸ் சாதனைகள் செய்து விட்டநிலையில் நேற்று முன்தினம் இறுதி நாளன்று பிரமாண்டமான வாணவேடிக்கை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் சிறப்பம்சமாக 15 ஆயிரம் அடி உயரத்திற்கு 20 ஸ்கை டைவிங் வீரர்கள் விமானம் மூலம் சென்றனர். பின்னர் விமானத்தில் இருந்து குளோபல் வில்லேஜ் கண்காட்சி வளாகத்தை நோக்கி குதித்தனர். அப்படி குதிக்கும்போது பட்டாசுகளை கொளுத்தியவாறு வாணவேடிக்கைகளை நடத்தினர். மொத்தம் 78 வகையான வாணவேடிக்கைகள் ஸ்கை டைவிங் வீரர்களால் வானில் செய்து காட்டப்பட்டது. இந்த காட்சிகளை பொதுமக்கள், குழந்தைகள் வெகுவாக ரசித்து பார்த்தனர்.

கின்னஸ் சாதனை விருது

அந்த வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் அனைத்தும் இசையுடன் சேர்த்து நடைபெற்றது சுவாரசியத்தை தருவதாக இருந்தது. உலகில் அதிக உயரத்தில் இருந்து குதித்து ஸ்கை டைவிங் வீரர்கள் வாணவேடிக்கை காண்பித்த சாதனைக்காக குளோபல் வில்லேஜ் நிர்வாகத்திற்கு கின்னஸ் சாதனை விருது வழங்கப்பட்டது.

இதற்காக நடைபெற்ற நிகழ்ச்சியில் குளோபல் வில்லேஜ் தலைமை செயல் அதிகாரி பதெர் அன்வாஹிக்கு கின்னஸ் நிறுவனத்தின் வர்த்தக மேலாளர் ஷாடி காட் சான்றிதழை வழங்கினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.