சளைக்காத சமூகப் போராளி டிராஃபிக் ராமசாமி : ஸ்டாலின் இரங்கல்

சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி சிறிது காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு வென்டிலேட்டர் சிகிச்சையில் இருந்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று இரவு காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:

‘‘சமூக நல அக்கறையுடனும் சட்டத்தின் துணை கொண்டும், தனது கடைசி மூச்சுவரை சளைக்காத சமூகப் போராளியாக வாழ்ந்த பெரியவர் டிராபிக் ராமசாமி அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எங்கெல்லாம் சட்டத்திற்குப் புறம்பாகச் சாலைகள் ஆக்கிரமிக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் சற்றும் சமரசமின்றி அவற்றை அகற்றுவதற்காக சட்டத்தையே ஆயுதமாகப் பயன்படுத்திய சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி அவர்கள். சாலைவிதிகளைப் பற்றி சாமானிய மக்கள் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்படக் காரணமாக இருந்தவர்.

பொதுநலத்துக்காக வழக்குகள் தொடுப்பதையே தனது பொதுவாழ்க்கையாக்கிக் கொண்ட பெரிய மனிதர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ எனக் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.