திருச்சியில் தசாவதார கோயில் 

திருச்சியில் தசாவதார கோயில்

தோஷ விருக்தி தளமாக விளங்கும் தசாவதார கோயில்

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் மேலூர் சாலையில் கொள்ளிடம் ஆற்றங்கரையில் இக்கோவில் உள்ளது. கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் திருமங்கையாழ்வாருக்கு உற்சவம், கார்த்திகை சொக்கப்பானை உற்சவம், மார்கழி உற்சவம், மாதத்தில் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.

இங்கு திருமங்கையாழ்வாருக்குத் தனி சன்னதியுள்ளது. அகோபில மட ஜீயர் ஸ்வாமி 44வது பட்டம் ஸ்ரீ ஆதிவண்சட கோபயதீந்திர மஹா தேசிகன் மற்றும் அவருடைய குரு 41வது பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கர் ஸ்ரீவன் சடகோபல லட்சுமி நரசிம்ம ஸ்ரீ சடகோப யதீந்திர மஹா தேசிகன் ஆகியோரின் ஜீவசமாதி தனி சன்னதியாக அமைக்கப்பட்டுள்ளது.

கிரகங்கள் தோஷ நிவர்த்தி தலமாக இருப்பதால் ஒவ்வொரு கிரக தோஷமுடையவர்கள் தங்கள் பிறந்த நட்சத்திரத்தில் தசாவதார கோயிலில் பத்து அவதாரங்களையும் பிரார்த்தித்துப் பலனடையலாம். ஸ்ரீ அகோபில மடத்தால் நிர்வகிக்கப்படும் இந்த கோயிலின் மூலஸ்தானத்தில், மச்சா, கூர்மா, வராக, நரசிம்மா ஆகிய அவதாரங்கள் ஆயுதங்கள் இல்லாமல் சங்கு சக்கரத்துடனும், வாமன அவதாரம் கையில் குடையுடனும், பரசுராம அவதாரம் கையில் கோடாரியுடனும், காட்சியளிக்கின்றனர்.

ராம அவதாரம் வில், அம்புடனும், பலராமன் அவதாரம் கலப்பையுடனும், ஸ்ரீ கிருஷ்ணா அவதாரம் நர்த்தன கிருஷ்ணனாக ஒரு கையில் வெண்ணெய்யுடனும், நாட்டிய பாவனையிலும், கல்கி அவதாரம் கேடயம், கத்தியுடனும் பத்து அவதாரங்களும் மூலஸ்தானத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். மூலஸ்தானத்தில் சேனாதிபதி விஸ்வக்சேனர் வீற்றிருக்கிறார். இங்குள்ள உற்சவ மூர்த்தி லெட்சுமி நாராயணர். இவர் ஆழ்வார்களாலேயே பூஜை செய்யப்பட்டவர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.