கேரளாவின் மார் தோமா சிரியன் தேவாலயத்தில்  பிஷப்பாக சேவையாற்றி வந்த பிலிப்போஸ் மார் கிரைஸ்டோம் தன்னுடைய 104வது வயதில் காலமானார். உலகிலேயே மிகவும் மூத்த மதபோகரும், வயதானவருமான பிலிப்போஸ் மார் கிரைஸ்டோம் மரணம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  பேராயர் பிலிப்போஸ் மார் கிரைஸ்டோமிற்கு 2018ம் ஆண்டு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

சிறுநீர் பாதையில் ஏற்பட்ட தொற்று காரணமாக திருவில்லாவில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிலிப்போஸ் மார் கிரைஸ்டோம், ஏப்ரல் 27ம் தேதி அன்று தன்னுடைய 104வது பிறந்தநாளை கொண்டாடினார். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என்பது உறுதியானது. 

கொரோனா இல்லை என்பது உறுதியானதை அடுத்து நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அங்கிருந்து கும்பநாட்டில் உள்ள பெல்லோஷிப் மிஷன் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும், நள்ளிரவில் அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்தது. இதனைத் தொடர்ந்து அதிகாலை 1.15 மணி அளவில் அவர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டது. பிஷப்பின் இறுதிச்சடங்கு நாளை மாலை 3 மணிக்கு திருவில்லாவில் உள்ள தலைமை சர்ச்சில் நடைபெற உள்ளது. 

இந்தியாவில் அதிக காலம் கிறிஸ்துவ மக்களுக்காகவும், ஏழை, எளிய மக்களுக்காகவும் பல்வேறு சேவையாற்றிய பிலிப்போஸ் மார் கிரைஸ்டோம் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.  “கிருபை பொருந்திய மார் தோமா சிரியன்தேவலாயத்தின் பேராயர் டாக்டர் பிலிபோஸ் மார் கிறிஸ்டோஸ்டமின் மறைவு மிகுந்த வருந்தமளிக்கிறது. அவருடைய உயர்ந்த இறையியல் அறிவுக்காகவும், மனிதர்களின் துன்பங்களை நீக்க பாடுபட்டதற்காகவும் அவர் என்றும் நினைவுகூரப்படுவார். மலங்கரா மார் தோமா சிரிய தேவாலய உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என பதிவிட்டுள்ளார்.