மக்கள் நீதி மய்யம் அணிக்கு 5-வது இடம் – நாடாளுமன்றத் தேர்தலை விட 1.26 % வாக்குகள் குறைவு

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் மக்கள் நீதி மய்யம் தலைமையிலான கூட்டணிக்கு ஐந்தாவது இடமே கிடைத்திருக்கிறது. 2019-ம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தலை விட ஒன்று புள்ளி 26 விழுக்காடு குறைவான வாக்குகளே அக்கட்சிக்கு கிடைத்துள்ளன.
கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கிய ஓராண்டில் நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்தது. அப்போது, 5 தொகுதிகளில் 1 லட்சத்துக்கும் அதிகமாக வாக்குகளைப் பெற்ற அக்கட்சி, 3.71 விழுக்காடு வாக்குகளையும் பெற்று கவனம் ஈர்த்தது. அதன் காரணமாக, சட்டப்பேரவை தேர்தலில் கடந்த முறையைக் காட்டிலும், அதிகமான வாக்குகள் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சட்டப் பேரவைத் தேர்தலில், 2.45 விழுக்காடு வாக்குகளே மக்கள் நீதி மய்யத்திற்கு கிடைத்துள்ளன. இது நாடாளுமன்றத் தேர்தலைக் காட்டிலும் 1.26 விழுக்காடு குறைவு.
image
2019-ம் ஆண்டில் 38 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம், இந்தமுறை 133 இடங்களில் மட்டுமே போட்டியிட்டது. மீதமுள்ள 99 இடங்கள் சமக, ஐஜேகே உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டதும், கமல்ஹாசன் போட்டியிட்ட கோவை – தெற்கில் ஒட்டுமொத்த கட்சியினரும் கவனம் செலுத்தியதும் பிரதான காரணமாக சொல்லப்படுகிறது. இதுபோன்ற காரணங்களாலேயே, நாடாளுமன்றத் தேர்தலில் 15 லட்சத்து 75 ஆயிரத்து 324 பேர் எனும் மக்கள் நீதி மய்யத்திற்கு வாக்களித்திருந்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 58 ஆயிரத்து 847 ஆக குறைவதற்கும் காரணமாக குறிப்பிடப்படுகிறது.
2021 சட்டமன்றத் தேர்தலில், திமுக, அதிமுக கூட்டணிகளைத் தவிர்த்து மூன்றாம் அணிக்கான போட்டியில் நாம் தமிழர் கட்சி 6.85 விழுக்காடு வாக்குகளையும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 2.47 விழுக்காடு வாக்குகளையும் பெற்று மக்கள் நீதி மய்யத்திற்கு முந்தைய இடங்களை பிடித்திருக்கின்றன. இதனால், 5 வது இடமே அக்கட்சிக்கு கிடைத்திருக்கிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.