மாநகர பஸ்கள் நாளை முதல் 50 சதவீத இருக்கைகளுடன் இயங்கும்- போக்குவரத்து கழகம்

சென்னை:

மாநகர போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று அதிக அளவில் பரவி வருவதை தடுக்கின்ற வகையில், தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005-ன் கீழ், தமிழ்நாடு முழுவதும் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. அதனைத் தொடர்ந்து, கடந்த 3-ந் தேதியன்று தமிழ்நாட்டில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்திட, 6-ந் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன் அடிப்படையில், அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 50 சதவிகித இருக்கைகளில் மட்டுமே பொதுமக்கள் அமர்ந்து பயணித்திட அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை (6-ந் தேதி) முதல் மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இயக்கப்படும் பேருந்துகளில், 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பயணிகள் பயணம் செய்திட அனுமதிக்கப்படுவார்கள்.

பயணிகள் உரிய முகக்கவசம் அணிந்து, தனிநபர் இடைவெளியினைப் பின்பற்றி பாதுகாப்பான முறையில் பயணம் செய்யுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.