யார் பொறுப்பு? கற்பித்தல் உபகரணம் களவு போனால்…பள்ளிகளில் இரவு காவலர் நியமிக்கணும்!

கோவை : பள்ளிகளில் இரவு நேர காவலர் பணியிடங்கள் காலியாக இருப்பதால், கற்பித்தல் உபகரணங்கள் களவுபோகும் அபாயம் இருப்பதாக, தலைமையாசிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

பள்ளிகள் மீண்டும் திறக்கும் வரை தற்காலிகமாகவாவது, காவலர் நியமிக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பள்ளிகளில் காலியாக உள்ள இரவுநேர காவலர், துப்புரவு பணியாளர் பணியிடங்கள் அவுட்சோர்சிங் முறையில், நிரப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கான எவ்வித முயற்சிகளும் எடுக்கப்படவில்லை.தொகுப்பூதிய அடிப்படையில், பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம், சில பள்ளிகளில் அடிப்படை பணியாளர் இடங்கள் தற்காலிகமாக நிரப்பப்பட்டன.

அந்த ஊழியர்களுக்கு முறையாக சம்பளம் வழங்க நிதியில்லாததால், 90 சதவீத அரசுப்பள்ளி களில் இரவு நேர காவலர் பணியிடங்கள் காலியாகவே உள்ளன.இதுகுறித்து, பலமுறை பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகத்திற்கு தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை. கொரோனா தொற்று காரணமாக தற்போது பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.இங்குள்ள கற்பித்தல் உபகரணங்கள் காணாமல் போகும் பட்சத்தில், உரிய தலைமையாசிரியரே பொறுப்பேற்க வேண்டும். இதனால், விரைவில் அடிப்படை பணியாளர் இடங்கள் நிரப்பப்பட வேண்டுமென்ற, கோரிக்கை வலுத்து வருகிறது.

இது தொடர்பாக, அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சிலரிடம் பேசியபோது, அவர்கள் கூறியதாவது:அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் ஹைடெக் லேப் வசதி உள்ளது. குறைந்தபட்சம் 10 முதல், அதிகபட்சம் 20 கம்ப்யூட்டர்கள், புரோஜெக்டர் ஆகியவை உள்ளன. இதுதவிர அலுவலக பயன்பாட்டிற்கான பொருட்களும் பள்ளிகளிலே இருப்பதால், விடுமுறை காலங்களில் கண்காணிக்க, இரவு நேர காவலர் நியமிக்க வேண்டும்.கொரோனா தொற்று காரணமாக, எட்டாம் வகுப்பு வரை மாணவர்கள், பள்ளிக்கு வராததால், பெற்றோர் ஆசிரியர் கழக செயல்பாட்டிற்காக மாணவர்களிடம் வசூலிக்கப்படும் தலா 50 ரூபாய் பணமும் பெறப்படவில்லை

.இதனால், தற்காலிக பணியாளர்களுக்கு, ஊதியம் வழங்குவதிலும் சிக்கல் நீடிக்கிறது. அவ்வப்போது பள்ளிக்கு தலைமையாசிரியர்கள் வந் தாலும், இரவு நேர கண்காணிப்பு இன்றி, கற்பித்தல் உபகரணங்கள் களவு போகும் அபாயம் உள்ளதால், விரைவில் காலியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்.குறைந்தபட்சம் பள்ளிகள் மீண்டும் திறக்கும் வரை, தற்காலிக காவலர்களையாவது நியமிக்க வேண்டும். உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல், பொருட்கள் திருட்டுப்போனால், தலைமை ஆசிரியர்கள் பொறுப்பேற்க முடியாது.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.