இமாச்சல பிரதேசம் -கோவாவில் 14ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

சிம்லா:
இமாச்சல பிரதேசத்தில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு ஊரடங்கு 14ம் தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களின் நலன் கருதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது. முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அனைத்தும் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்படலாம். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் பால், ரொட்டி, மருந்து கடைகள் வழக்கம் போல் திறந்திருக்கும். அரசு அலுவலகங்கள் 30 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும்வரை பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. 
இதேபோல் கோவா மாநிலத்திலும் வரும் 14ம் தேதி காலை 7 மணி வரை ஊரடங்கை நீட்டிக்க அரசு முடிவு செய்திருப்பதாக முதல்வர் பிரமோத் சாவந்த் கூறி உள்ளார். அதேசமயம், அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் செயல்படும் நேரம் அதிகரிக்கப்படும் என கூறி உள்ளார். அதாவது, காலை 7 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை கடைகள் செயல்படலாம்.
மேலும், வீடு மற்றும் கட்டிடங்கள் சீரமைப்பு தொடர்பான கடைகள், மழை முன்னெச்சரிக்கை பணிகள், ஸ்டேசனரி பொருட்களுக்கு அனுமதிக்கப்படும் என்றும் முதல்வர் கூறி உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.