ஆசிய கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் இந்தியா-வங்காளதேசம் இன்று மோதல்

தோகா, 
2022-ம் ஆண்டுக்கான உலக கோப்பை மற்றும் 2023-ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கான ஆசிய மண்டல தகுதி சுற்றில் இந்திய அணி ‘இ’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. ஏற்கனவே உலக கோப்பை வாய்ப்பை இழந்து விட்ட இந்திய அணி ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கான வாய்ப்பில் நீடிக்கிறது. சில தினங்களுக்கு முன்பு கத்தாருக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்த இந்திய அணி இன்று தோகாவில் நடக்கும் ஆட்டத்தில் வங்காளதேசத்தை எதிர்கொள்கிறது. ஆசிய போட்டிக்கான 3-வது ரவுண்டுக்கு நேரடியாக தகுதி பெறுவதற்கு இன்றைய மோதலில் கட்டாயம் வெற்றி காண்பது அவசியமாகும். இ்ல்லாவிட்டால் பிளே-ஆப் சுற்றில் விளையாட வேண்டிய நெருக்கடி உருவாகும். 5 அணிகள் இடம் பெற்றுள்ள இந்த பிரிவில் தரவரிசையில் 105-வது இடம் வகிக்கும் இந்திய அணி 3 டிரா, 3 தோல்வி என்று 3 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் இருக்கிறது. தரவரிசையில் 184-வது இடத்தில் உள்ள வங்காளதேசம் 2 டிரா, 4 தோல்வியுடன் 2 புள்ளி பெற்று கடைசி இடத்தில் இருக்கிறது. இவ்விரு அணிகளும் கடைசியாக சந்தித்த 3 ஆட்டங்களும் டிராவில் முடிந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்2 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.