ஐபிஎல் கிரிக்கெட்: எஞ்சிய போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் தொடக்கம்

புதுடெல்லி,
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 14-வது சீசன் கடந்த ஏப்ரல் 9-ம் தேதி மும்பையில் தொடங்கியது. மே 2-ம் தேதி வரை மொத்தம் 29 போட்டிகள் நடைபெற்றன. ஆனால், வீரர்கள் மற்றும் அணி ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டன.

இதற்கிடையில், நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகளை மீண்டும் நடத்த பிசிசிஐ தீவிர முயற்சி மேற்கொண்டன. குறிப்பாக, இந்தியாவில் கொரோனா தொற்று அதிகமாக பரவியதால் வெளிநாட்டில் எஞ்சிய போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டது.
அதன்படி, ஐக்கிய அரபு அமீரகத்தில் எஞ்சிய போட்டிகளை நடத்த அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்துடன் இந்திய கிரிக்கெட் வாரியம் பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தையில் ஐபிஎல் போட்டிகளை அமீரகத்தில் நடத்த அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், கொரோனாவால் தடைபட்டுள்ள ஐபிஎல் கிரிக்கெட்டின் எஞ்சிய போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் 19-ம் தேதி முதல் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. செப்டம்பர் 19-ம் தேதி முதல் அக்டோபர் 15 போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 
30-வது போட்டி செப்டம்பர் 19-ம் தேதி நடைபெறுகிறது. ஐபிஎல் கிரிக்கெட்டின் இறுதிப்போட்டி அக்டோபர் 15-ம் தேதி நடைபெறுகிறது.
துபாய், சார்ஜா மற்றும் அபுதாபி ஆகிய மூன்று இடங்களில் மொத்தம் 25 நாட்கள் ஐபிஎல் போட்டி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.  
இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகலாம் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.