ஐ.நா. பொதுச்சபை தலைவராக அப்துல்லா ஷாகித் தேர்வு: இந்தியா வாழ்த்து

வாஷிங்டன்,
ஒவ்வொரு வருடமும் சுழற்சி அடிப்படையில் ஐநாவின் பொதுக்குழு தலைவர் தேர்வு செய்யப்படுவார். பிராந்திய அடிப்படையில் சுழற்சி முறையில் இந்த வாய்ப்பு வழங்கப்படும். இந்த நிலையில் 2021-22க்கான வாய்ப்பு ஆசிய -பசிபிக் குழுவிற்கு வழங்கப்பட்டது.

இதையடுத்து கடந்த வருடம் இந்த தேர்தலில் போட்டியிடுவதாக மாலத்தீவின் வெளியுறவுத்துறை மந்திரி அப்துல்லா ஷாகித் அறிவித்தார். இவரை எதிர்த்து அப்போது யாரும் போட்டியிட முன்வராத நிலையில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இவருக்கு ஆதரவு வழங்கியது.
அதே சமயம் மாலத்தீவு இந்த பதவியை இதுவரை வகித்தது இல்லை. இதனால் பல்வேறு நாடுகள் நல்லெண்ண அடிப்படையில் மாலத்தீவின் வெளியுறவுத்துறை மந்திரி அப்துல்லா ஷாகித்திற்கு ஆதரவு அளித்தது. இந்தியாவும் கடந்த நவம்பரில் அப்துல்லா ஷாகித்திற்கு ஆதரவு அளிப்பதாக அதிகார்பூர்வமாக தெரிவித்தது .
இந்த நிலையில் திடீரென ஆப்கானிஸ்தானின் வெளியுறவுத்துறை மந்திரி சலமாய் ராசூல் இதே பதவிக்கு போட்டியிடுவதாக 6 மாதங்கள் முன் அறிவித்தார். ஆபகானிஸ்தானுக்கு பல நாடுகள் ஆதரவு தந்தாலும், திடீரென கடைசி கட்டத்தில் வந்ததால், முன்கூட்டியே பலர் மாலத்தீவிற்கு ஆதரவு அளிப்பதாக உறுதி அளித்து இருந்தனர்.
அதோடு ஆப்கானிஸ்தான் ஏற்கனவே 1966-67ல் இந்த பதவியில் இருந்துள்ளது. மாலத்தீவு இந்த பதவியை வகித்தது இல்லை. மாலத்தீவு ஏற்கனவே பலரிடம் பேசி ஆதரவை பெற்று இருந்தது. இந்த நிலையில் இன்று நடந்த வாக்கெடுப்பில் மாலத்தீவு வெற்றிபெற்றது.
இதையடுத்து ஐநா பொதுச்சபையின் 76வது தலைவராக மாலத்தீவின் வெளியுறவுத்துறை மந்திரி அப்துல்லா ஷாகித் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 193 உறுப்பினர்கள் கொண்ட பொதுச்சபையில் 191 உறுப்பினர்கள் ஓட்டளித்தனர். இவருக்கு ஆதரவாக 143 வாக்குகள் விழுந்தன. 48 வாக்குகள் எதிராக சென்றன. 
வரும் செப்டம்பரில் 76-வது பொதுச்சபை கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தை ஷாகித் துவக்கி வைப்பார். இந்தியா உள்பட உறுப்பினர் நாடுகளின் ஐ.நா., தூதர்கள் அப்துல்லா ஷாகிப்பிற்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.