சென்னையில் மின்சார ரெயில் சேவை அதிகரிப்பு

சென்னை, ஜூன்.7-

சென்னையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதால் இன்று (திங்கட்கிழமை) முதல் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், சென்னை ரெயில்வே கோட்டம் மின்சார ரெயில் சேவையை அதிகரித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கடந்த மாதம் 151 ஆக இருந்த மின்சார ரெயில் சேவையின் எண்ணிக்கையை, 208 ஆக சென்னை ரெயில்வே கோட்டம் அதிகரித்தது. இந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகளை ஒட்டி இன்று முதல் மேலும் கூடுதலாக மின்சார ரெயில்களை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

மூர்மார்க்கெட், ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி மார்க்கத்தில் 97 மின்சார ரெயில் சேவையும், மூர்மார்க்கெட், கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை மார்க்கத்தில் 48 சேவையும், சென்னை கடற்கரை, வேளச்சேரி மார்க்கத்தில் 34 ரெயில் சேவையும், கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் மார்க்கத்தில் 88 ரெயில் சேவையும் என 208 மின்சார ரெயில் சேவை இயக்கப்படும்.

அதேபோல், ஆவடி–பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் மார்க்கத்தில் 4 மின்சார ரெயில் சேவையும், பட்டாபிராம்–பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் மார்க்கத்தில் 8 மின்சார ரெயில் சேவையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் சென்னையில் 279 மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.