துவக்கம்! பூந்தமல்லி பைபாஸ் – கலங்கரை விளக்கம் இடையே …… மெட்ரோ ரயில் புதிய பாதைக்கான ஆரம்பக்கட்ட பணி

பூந்தமல்லி பைபாஸ் – கலங்கரைவிளக்கம் இடையே, மெட்ரோ ரயில் புதிய பாதை அமைப்பதற்கான, ஆரம்ப கட்ட பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

சென்னை மெட்ரோ ரயில், இரண்டாவது திட்டத்தில், 61 ஆயிரத்து, 843 கோடி ரூபாய் செலவில், பூந்தமல்லி பைபாஸ் – கலங்கரை விளக்கம் இடையே, 26.01 கி.மீ., புதிய பாதை உட்பட, மூன்று வழித்தடங்களில், 118.9 கி.மீ., மெட்ரோ பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன. இத்திட்டப் பணிகளை, 2026ம் ஆண்டு க்குள் முடிக்க ஏதுவாக, பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, உலகளாவிய அளவில் ஒப்பந்ததாரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு வருகிறது.’ஒப்பந்தம் பெற்ற நிறுவனங்கள், 28 நாட்களுக்குள், ஆரம்பக்கட்ட பணிகளை துவங்க வேண்டும்’ என, மெட்ரோ நிறுவனம் கேட்டுக்கொண்டதால், பாதை கட்டுமானத்திற்கான ஆரம்ப கட்ட பணிகளை துவங்கியுள்ளன.

அந்தவகையில், பூந்தமல்லி பைபாஸ் – கலங்கரைவிளக்கம் மெட்ரோ பாதை கட்டுமான பணிக்கு, நசரத்பேட்டை அருகே சாலையில், பள்ளம் தோண்டும் பணி துவங்கப்பட்டுள்ளது. திட்டப்பணிகளை, அதிகாரிகள் மேற்பார்வை செய்வதற்கு ஏதுவாக, தற்காலிக அலுவலகம் அமைக்கும் பணி நடக்கிறது.பணிகள் இடையூறின்றி நடப்பதற்கு ஏதுவாக, சாலையில், 50 மீட்டர் நீளத்துக்கு இரும்பு பாதுகாப்பு தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.

12 சுரங்க நிலையங்கள் : இப்பாதை திட்டத்தில், போரூர் ஜங்க் ஷன் – கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் இடையே, 7.95 கி.மீ., மற்றும் ஒன்பது மெட்ரே ரயில் நிலையங்கள் அமைக்க, ‘எல் அண்ட் டி’ நிறுவனம் ஒப்பந்தம் பெற்றுள்ளது. பவர்ஹவுஸ் – கலங்கரை விளக்கம் இடையே, பாதை மற்றும் நிலையங்கள் அமைப்பதற்கு, இரண்டு நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட உள்ளது. இப்பாதை, 16 கி.மீ., தரைக்கு மேலும், 10.1 கி.மீ., சுரங்கத்திலும் அமைகிறது. தரைக்கு மேல், 18 நிலையங்கள், சுரங்கத்தில், 12 நிலையங்கள் என, மொத்தம், 30 நிலையங்கள் கட்டப்பட உள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.