நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்… பிரதமர் மோடிக்கு பன்னீர்செல்வம் கடிதம் !!

மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு மட்டுமல்லாமல் அனைத்து கல்லூரிப் படிப்புகளுக்குமான நுழைவுத் தேர்வை நிரந்தமாக ரத்து செய்யும் வகையில் ஒரு கொள்கை முடிவை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வினை ஆரம்ப காலத்திலிருந்தே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து எதிர்த்து வந்தார் என்றும் 2011 ஆம் ஆண்டு இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கைக்கு நீட் தேர்வினை அறிமுகப்படுத்த அப்போதைய மத்திய அரசு முடிவு எடுத்தபோது, அப்போதைய தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜெயலலிதா தனது கடுமையான ஆட்சேபனையை கடிதம் வாயிலாக அப்போதைய பிரதமருக்குத் தெரிவித்தார் என்றும் பன்னீர்செல்வம் சுட்டிக்காட்டியுள்ளார்.

பின்னர், 2012 ஆம் ஆண்டு மத்திய அரசால் அரசாணை வெளியிடப்பட்டபோது, தனது கடுமையான எதிர்ப்பினை அவர் பதிவு செய்ததோடு, தன் இறுதி மூச்சு வரை அதே நிலைப்பாட்டில் இருந்தார் என்றும் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

ஜெயலலிதாவின் வழியைப் பின்பற்றி, 2017 ஆம் ஆண்டு, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மருத்துவச் சேர்க்கை அமையும் வகையில், இரண்டு சட்டமுன்வடிவுகள், ஒருமனதாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்று பன்னீர்செல்வம் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள் நீட் தேர்வில் கலந்து கொள்ள பல்வேறு சங்கடங்களை எதிர்கொள்வதாக பன்னீர்செல்வம் சுட்டிக்காட்டியுள்ளார். அவ்வாறு அவர் கூறியிருக்கும் காரணங்கள் பின்வருமாறு;-

1. நுழைவுத் தேர்வுக்கான வினாக்கள் மத்திய அரசின் பாடத் திட்டங்களை, அதாவது என்.சி.இ.ஆர்.டி/சி.பி.எஸ்.சி. (NCERT/CBSC) ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டிருப்பதால், மாநில அரசால் 12-ஆம் வகுப்புக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள பாடத்திட்டங்களில் பயின்றவர்கள் நீட் தேர்வில் போட்டியிடுவது சமபலம் வாய்ந்த களமாக இருக்காது.

2. இதுபோன்ற நுழைவுத் தேர்வுகளில், ஊரகப் பகுதி மாணவர்கள் மற்றும் பின்தங்கிய சமூகப் பொருளாதார பின்னணியைக் கொண்ட மாணவர்கள், நகர்ப்புற மாணவர்களுடன் போட்டியிட முடியாது. இதற்குக் காரணம், அந்தப் பகுதிகளில் தேவையான பயிற்சி நிலையங்கள் இல்லாததும், குறித்த சமயத்தில் அதற்குத் தேவையான புத்தகங்களை பெறமுடியாததும் தான்.

3. பயிற்சி நிலையங்களை அணுகவும், பயிற்சிக்குத் தேவையான புத்தகங்களை பெறவும் நிதியும், அவர்கள் வசிக்கும் இருப்பிடமும் இடம் தராததால், நீட் தேர்வு என்பது சமூகப் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை ஊரகப் பகுதி மாணவர்களுக்கு பாதகமாக அமைந்துள்ளது.

4. போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ள பயிற்சி அளிக்கும் நிறுவனங்களுக்கு கட்டணம் செலுத்த முடியாத நிலை ஊரகப் பகுதி மாணவர்களிடம் காணப்படுகிறது.

5. நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு அதன் காரணமாக, அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஊரகப் பகுதி மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கும் பட்சத்தில், ஊரகப் பகுதிகளில் நிலவும் மருத்துவர்களின் பற்றாக்குறை ஓரளவுக்கு குறைக்கப்படும்.

6. பிளஸ் 2 பொதுத் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை மருத்துவக் கல்லூரிகளில் நடைபெற்றபோது, தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள், குறிப்பாக ஏழை மற்றும் விளிம்பு நிலை மாணவர்கள், அதிகம் இருந்தனர். ஆனால், தமிழ்நாட்டில் நீட் தேர்வு அறிமுகம், விளிம்பு நிலை மாணவர்கள் மருத்துவப் படிப்பில் நுழைவதை கடினமாக்கிவிட்டது.

மேற்கூறிய கருத்துக்களின் அடிப்படையில், மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு மட்டுமல்லாமல் அனைத்து கல்லூரிப் படிப்புகளுக்குமான நுழைவுத் தேர்வை நிரந்தமாக ரத்து செய்யும் வகையில் ஒரு கொள்கை முடிவை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் மேல்நிலைப் பள்ளி இறுதித் தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் அனைத்து படிப்புகளுக்குமான மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள மாநிலங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.