மனநோய்க்கு மருந்தாக மதுக் கடைகளைத் திறக்க வேண்டும்: புதுச்சேரி ஆளுநரை வலியுறுத்திய பாஜக எம்எல்ஏவால் சர்ச்சை

மதுவால் மனநோயாளியாக ஆனவர்களின் வியாதிக்கு மருந்தாக மதுபானம் தர மதுக் கடைகளைத் திறக்க வேண்டும் என்று ஆளுநர் தமிழிசையிடம் புதுச்சேரி பாஜக எம்எல்ஏ ஜான்குமார் கோரிக்கை வைத்துள்ளார். ஆளுநரும் ஆவன செய்வதாகத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

புதுச்சேரியில் கரோனா தொற்றுப் பரவலால் மதுக்கடைகள் மூடியுள்ளன. இந்நிலையில் புதுச்சேரியில் காமராஜ் நகர் தொகுதி பாஜக எம்எல்ஏ ஜான்குமார் வாட்ஸ் அப் ஆடியோ பதிவை தனது வாட்ஸ் அப் குழுமத்திலும், முக்கியக் குழுக்களிலும் இன்று வெளியிட்டார்.

அதில், “எனது தொகுதியில் மது கிடைக்காமல் சானிடைசர் குடித்து ஒருவர் அரசு மருத்துவமனையில் இறந்துவிட்டார். மனவருத்தம் அடைந்து, ஆளுநரை (தமிழிசை) தொடர்புகொண்டு பேசினேன். அப்போது அவரிடம், “அம்மா, குடி மனநோயாகிவிட்டது. வியாதிக்கு மருந்து கொடுப்பதாக எண்ணி மதுக்கடையைத் திறங்கள். மதுவுக்குப் பலரும் அடிமையாகிவிட்டனர். சிலர் தவறான முறையில் போதைக்காக சில பொருட்களைப் பயன்படுத்துகின்றனர்” என்றேன்.

அதற்கு ஆளுநரும், கடையைத் திறக்க ஆவன செய்வதாகக் குறிப்பிட்டார். தயவுசெய்து மதுவால் மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் குடிக்கு அடிமையாகாமல் கொஞ்சமாக மது வாங்கி வியாதிக்கு மட்டும் குடியுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பாஜக எம்எல்ஏவின் மது தொடர்பான இந்த ஆடியோ பதிவு சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.