மீண்டும் பயணத்தை துவக்கிய வெனிஸ் சொகுசு கப்பல்| Dinamalar

வெனிஸ், : இத்தாலியில் கொரோனா தொற்று பரவலால் ஒன்றரை ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வெனிஸ் நகர சொகுசு கப்பல் பயணம் நேற்று முன் தினம் மீண்டும் துவங்கியது.

ஐரோப்பிய நாடான இத்தாலியின் வெனிஸ் நகரம் சர்வதேச சுற்றுலாவில் முக்கிய இடம் வகிக்கிறது. வெனிஸ் நகரைச் சுற்றியுள்ள உப்பு நீர் ஏரியில் படகு சவாரி செய்வதும் பிரமாண்ட சொகுசு கப்பல்களில் புறப்பட்டு அருகிலுள்ள பல ஐரோப்பிய நாடுகளை சுற்றிப்பார்ப்பதும் சுற்றுலா பயணியரின் விருப்பமாக உள்ளது.கடந்த 2019ல் மட்டும் 16 லட்சம் சுற்றுலா பயணியர் சொகுசு கப்பல் வாயிலாக வெனிஸ் நகரை கடந்து சென்றுள்ளனர். ஏழு லட்சம் பேர் அங்கு இறங்கி சுற்றிப் பார்த்துள்ளனர்.கொரோனா தொற்று பரவல் காரணமாக சொகுசு கப்பல்பயணம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் நேற்று முன் தினம் மீண்டும் பயணம் துவங்கியது. ‘எம்எஸ்சி ஆர்கெஸ்ட்ரா’ என்ற சொகுசு கப்பல் 1000 பயணியருடன் நேற்று முன் தினம் புறப்பட்டது. வெனிஸ் நகரில் உள்ள உப்பு நீர் ஏரியில் சொகுசு கப்பல்கள் செல்வதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.அங்கு சொகுசு கப்பல்கள் இயக்குவதை நிறுத்த இத்தாலி அரசு முடிவு செய்தது. ஆனால் அதை நடைமுறைபடுத்த இன்னும் சில காலம் ஆகும் என்றும் கூறப்படுகிறது.இந்நிலையில் மீண்டும் சொகுசு கப்பல் பயணம் துவங்கியிருப்பதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.