வண்டலூர் உயிரியல் பூங்காவில் 20 ஆண்டுகளுக்கு பின் குட்டி ஈன்ற மனித குரங்கு

வண்டலூர், ஜூன்.11-

வண்டலூா் உயிரியல் பூங்காவில் 20 ஆண்டுகளுக்கு பின்பு கவுரி என்ற பெண் மனித குரங்கு குட்டி ஈன்றுள்ளது. இதனால் பூங்காவில் மனித குரங்கு எண்ணிக்கை 3 ஆக உயா்ந்துள்ளது.

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிம்பன்சி எனப்படும் மனித குரங்குகள் சில ஆண்டுகளுக்கு முன்பு 4 இருந்தன. கடந்த 2015 ஆண்டில் அதில் ஒரு பெண் மனித குரங்கு வயது முதிர்வால் உயிரிழந்துவிட்டது. அதன்பின்பு அடுத்த சில மாதங்களில் மற்றொரு ஆண் மனித குரங்கும் உயிரிழந்துவிட்டது. அதற்கு பிறகு கவுரி என்ற பெண் மனித குரங்கும்,கோம்பி என்ற ஆண் மனித குரங்குமாக 2 மனித குரங்குகள் மட்டுமே வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருக்கின்றன. இதில் ‘கோம்பி’ மனித குரங்கு சிங்கப்பூரிலிருந்து வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டது.

இந்த மனித குரங்குகளை இனவிருத்தி செய்யவைக்க உயிரியல் பூங்கா விலங்குகள் பராமரிப்பாளர்கள், கால்நடை மருத்துவர்கள் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் இனவிருத்தியடையவில்லை.

இந்த நிலையில் கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக மார்ச் மாதம் 17ந்தேதி முதல் நவம்பர் 10ந்தேதி வரை வண்டலூர் உயிரியல் பூங்காவை பொதுமக்கள் சுற்றி பார்க்க தடைவிதித்து மூடப்பட்டிருந்தது. இந்த காலகட்டத்தில் பூங்காவில் அமைதியான சூழல் மற்றும் பார்வையாளர்கள் தொந்தரவு இல்லாத காரணத்தினால் மனித குரங்கு ஜோடி கவுரி, கோம்பி ஒன்று இணை சேர்ந்த காரணத்தால் 240 நாள் கர்ப்ப காலம் முடிந்து சில நாட்களுக்கு முன்பு மனித குரங்கு கவுரி அழகான மனித குரங்கு குட்டி ஒன்றை ஈன்றது. மனித குரங்கு 20 ஆண்டுகளுக்கு பிறகு குட்டி ஈன்றதால் பூங்காவில் உள்ள மருத்துவர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

தற்போது உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள காரணத்தால் புதிதாக பிறந்த மனித குரங்கு குட்டியை பூங்கா மருத்துவர்கள் மிகுந்த கவனத்துடன் அதனுடைய இருப்பிடத்தில் நல்ல முறையில் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். தற்போது கவுரியையும் குட்டியையும் தனியாக வைத்து பராமரித்து வருகின்றனர். தாயும்,சேயும் நலமாக உள்ளதாக கூறப்படுகிறது. கோம்பி மட்டும் அதற்கான இருப்பிடத்தில் தனியாக உள்ளது.

வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகள் மற்றும் பறவைகளை பொதுமக்கள் தத்தெடுத்து பராமரிக்கும் திட்டம் கடந்த 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது வரை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் பிரபல திரைப்பட நடிகர்கள் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், கார்த்திக் உள்ளிட்டோர் மற்றும் தனியார் நிறுவனத்தை சேர்ந்த தொழில் அதிபர்கள் உள்பட பலரும் விலங்குகளை தத்தெடுத்து பராமரித்து உள்ளனர்.

இந்த திட்டத்தில் பொதுமக்கள் ரூ.100 முதல் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலுத்தி விலங்குகளை ஒரு நாள் முதல் வருடக்கணக்கில் தத்து எடுக்கலாம் என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்ததோடு, பிரபல சினிமா நட்சத்திரங்கள், தொழில் அதிபர்கள், பொதுமக்கள் உள்பட அனைவருக்கும் பூங்கா நிர்வாகம் சார்பில் விலங்குகளை தத்தெடுக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வன விலங்குகள் தத்தெடுப்பு பற்றிய வவரங்கள் பூங்கா இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.