100 கோடி டோஸ் தடுப்பூசி ஜி – 7 தலைவர்கள் உறுதி

கார்ன்வால்:பிரிட்டனில் ‘ஜி – 7’ மாநாட்டில் பங்கேற்ற தலைவர்கள், உலக நாடுகளுக்கு 100 கோடி ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசி மருந்தை நன்கொடையாக வழங்குவதாக உறுதி அளித்துள்ளனர்.

பிரிட்டனில், கார்ன்வால் நகரில், ஜி – 7 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற மாநாடு நேற்று துவங்கியது. இதில் பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ், கனடா, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய ஏழு வளர்ந்த நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இதையடுத்து ‘கொரோனா பாதிப்பில் இருந்து மீள்வோம்’ என்ற கருத்தரங்கு நடந்தது.

அதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசியதாவது:நட்பு நாடுகளின் துணையுடன் கொரோனா பாதிப்பில் இருந்து இந்த உலகை காப்பாற்றுவோம். ஏற்கனவே எட்டு கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி மருந்தை, உலக சுகாதார நிறுவனத்தின் ‘கோவாக்ஸ்’ திட்டத்திற்கு வழங்குவதாக அறிவித்து உள்ளோம்.

இது தவிர 50 கோடி ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசி மருந்தை உலக நாடுகளுக்கு அமெரிக்கா இலவசமாக வழங்கும்.இவ்வாறு அவர் பேசினார். மாநாட்டிற்கு தலைமை ஏற்றுள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பேசும்போது, ”உலக நாடுகளுக்கு 10 கோடி டோஸ் தடுப்பூசியை பிரிட்டன் வழங்கும். ”அதில் 50 லட்சம் டோஸ் தடுப்பூசி, வரும் வாரங்களில் வினியோகிக்கப்படும்,” என்றார்.

மாநாட்டில் பங்கேற்ற இதர நாடுகளின் தலைவர்களும், தடுப்பூசி மருந்து வழங்குவதாக உறுதி அளித்தனர். இதன்படி, ஜி – 7 கூட்டமைப்பு சார்பில் குறைந்தபட்சம் 100 கோடி டோஸ் தடுப்பூசி மருந்து, ஏழை மற்றும் நடுத்தர நாடுகளுக்கு கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.