ரோல்ஸ் ராய்ஸ் கார் விவகாரம்: தனி நீதிபதியின் கருத்தை நீக்கக்கோரி நடிகர் விஜய் மேல்முறையீடு!

தமிழ்நாட்டின் தற்போதைய ஹாட் டாபிக் என்றால் வெளிநாட்டு சொகுசு காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடை கோரி நடிகர்
விஜய்
தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் அவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது தான். இந்நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து நடிகர் விஜய் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

நடிகர் விஜய் கடந்த 2012-ம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் என்ற சொகுசு காரை வாங்கினார். இந்தக் காருக்கு நுழைவுவரி செலுத்தாத காரணத்தால் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் அந்தக் கார் பதிவுசெய்யப்படவில்லை. அதையடுத்து விஜய் வாங்கிய அந்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி செலுத்தினால் மட்டுமே அதை வாகன போக்குவரத்துக்குப் பயன்படுத்தலாம் என வணிகவரித் துறை உதவி ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்தும், நுழைவு வரி வசூலிக்கத் தடை விதிக்கக் கோரியும் நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2012-ம் ஆண்டு மனுதாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு ஒன்பது ஆண்டுகளுக்கு பின் கடந்த சில தினங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி நடிகர் விஜய்யின் மனுவை தள்ளுபடி செய்ததுடன் அவருக்கு ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து, அந்த அபராதத் தொகையை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என்று உத்தவிட்டார்.

‘காசேதான் கடவுளடா’ பட ரீமேக்கில் இணைந்த குக்வித் கோமாளி சிவாங்கி: படப்பிடிப்பு துவக்கம்!

மேலும், பிரபல நடிகர்கள் திரையில் மட்டுமின்றி நிஜவாழ்விலும் உண்மையான ஹீரோக்களாகத் திகழ வேண்டும். இல்லையெனில் பொதுமக்கள் அவர்களை ரீல் ஹீரோக்கள் என நினைத்துவிடுவர். யார், குறித்த நேரத்தில், முறையாக வரியைசெலுத்துகிறார்களோ அவர்களே உண்மையான ஹீரோக்கள். ஏராளமான ரசிகர்களைக் கொண்டுள்ள மனுதாரர் தனது திரைப்படங்களில் லஞ்சத்துக்கு எதிராகவும், பல்வேறு சமூக பிரச்சினைகளுக்காகவும் குரல் கொடுப்பவராக தன்னை பிரதிபலிக்கும் அதேநேரத்தில் இதுபோல வரிஏய்ப்பில் ஈடுபடுவது என்பது ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்று. அவ்வாறு வரி ஏய்ப்பு செய்தால் அது தேசத் துரோகம் எனவும் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைத்தளத்தில் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். மேலும் ஒருசில அரசியல் கட்சி தலைவர்களும் இந்த விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக நீதிபதியின் உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

மனுவில் வாகன நுழைவு வரி பாக்கியை செலுத்த தயாராக இருப்பதாகவும், அதேசமயம் தன்னை பற்றி தீர்ப்பில் பதிவு செய்த விமர்சனங்களை நீக்கக் கோரியும், 1 லட்சம் அபராத தொகையை ரத்து செய்யக் கோரியும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.