அமெரிக்காவை தாக்கிய வெப்ப அலை: 200 பேர் பலி; கடல் விலங்குகள் குவியல் குவியலாக உயிரிழப்பு

அமெரிக்காவை தாக்கிய வரலாறு காணாத வெப்ப அலையானது 200 பேர் உயிரைப் பறித்துள்ளது. சமீப நாட்களாக அமெரிக்காவின் பசிபிக் வடமேற்கு பகுதிகளில் கடுமையான வெப்ப அலை தாக்கி வருகிறது.

இதனால் அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் 116 பேரும், வாஷிங்டன்னில் 78 பேரும் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் பல பகுதிகளில் வெப்பநிலை 46 டிகிரி செலியஸ் பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

அமெரிக்காவின் மேற்குப் பகுதியிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்ததால் அதைத் தணித்துக் கொள்ளும் பொருட்டு சாலையோரத்தில் நீரூற்றுகள் அமைக்கப்பட்டுள்ளன. மக்கள் அதில் தங்களின் தலைகளை நனைத்து ஆசுவாசப்படுத்திக் கொள்கின்றனர்.

மேலும், மக்கள் முடிந்தவரை வெளியில் வருவதை தவிர்க்கவும், குளிர்சாதன அறைகளில் இருக்கவும், அதிக அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ளவும் அரசாங்கத்தால் அறிவுறுத்தப்படுகின்றனர்.

ஒரேகான் மாகாணத்தின் போர்ட்லாண்ட் முல்ட்னோமா கவுன்ட்டியில் தான் அதிகளவில் வெப்ப அலை மரணங்கள் பதிவாகியுள்ளன. அங்கு, குளிர்சாதன இயந்திரங்கள் வசதி இல்லாத இடங்களில் உயிரிழப்பு அதிகமாக உள்ளது. இங்கு 37 வயது இளைஞர் ஒருவர் வெப்ப அலைக்கு உயிரிழந்துள்ளார்.

கனடாவின் பசிபிக் கடற்கரையில் 100 கோடிக்கும் அதிகமான கடல் விலங்குகள் வெப்ப அலைகளால் இறந்திருக்கலாம் என பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் கடல்வாழ் உயிரியலாளர் கிறிஸ்டோபர் ஹார்லி கூறியுள்ளார்.

தட்பவெப்பநிலை மாறிக்கொண்டே இருக்கிறது. அதன் காரணமாகவே பல வியத்தகு வானிலை நிகழ்வுகள், பெரிய வெள்ளம், காட்டுத் தீ போன்ற பல இயற்கை பேரிடர்கள் ஏற்படுகின்றன என அமெரிக்க வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.