ஆப்கன் தூதர் மகளை கடத்தியவர்களை 48 மணி நேரத்தில் கைது செய்ய இம்ரான்கான் உத்தரவு

இஸ்லாமாபாத்:
அண்டை நாடான பாகிஸ்தானில் பாகிஸ்தானுக்கான ஆப்கானிஸ்தான் தூதர் நஜிபுல்லா அலிகிலின் மகள் சில்சிலா அலிகில் நேற்று முன்தினம் மதியம் 1.30 மணியளவில் ஜின்னா சந்தை அருகே கடத்தப்பட்டு இரவு 7 மணியளவில் காயமடைந்த நிலையில் விடுவிக்கப்பட்டார்.
இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சகம், பாகிஸ்தானில் இருக்கும் ஆப்கன் அரசு அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்துக்கு போதிய பாதுகாப்பு அளிக்கவேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.
இதற்கிடையே, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ஆப்கானிஸ்தான் தூதரின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. 
இந்நிலையில், இஸ்லாமாபாத்தில் ஆப்கன் தூதரின் மகள் கடத்தலில் ஈடுபட்ட நபர்களைக் கைது செய்ய அனைத்து விதமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உள்துறை மந்திரி ஷேக் ரஷீத் அகமதுவுக்கு பிரதமர் இம்ரான் கான் உத்தரவிட்டுள்ளார்.
இஸ்லாமாபாத் காவல்துறையும் பிற சட்ட அமலாக்க நிறுவனங்களும் இந்த சம்பவத்தை முன்னுரிமை கொடுத்து  விசாரிக்க வேண்டும். இந்த விஷயத்தின் உண்மையை கொண்டுவர வேண்டும் மற்றும் குற்றவாளிகளை 48 மணி நேரத்திற்குள் கைது செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.