இந்த 11 மாவட்டங்களில் சும்மா வெளுத்து வாங்கப்போகும் கனமழை.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை.!

நீலகிரி, கோவை, தேனி, கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

சென்னை வானிலை மையத்தின் இயக்குநர் புவியரசன் கூறுகையில்;- வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் நீலகிரி, கோயமுத்தூர், தேனி, ஈரோடு, திருப்பூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும். மேலும்,  வட கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஒருசில லேசான மழை பெய்யக்கூடும்.

அதேபோல், நாளை கோயமுத்தூர், தேனி, நீலகிரி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய திண்டுக்கல், , ஈரோடு, திருப்பூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.  அடுத்த 48 மணிநேரத்தில் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அவ்வப்போது நகரில் ஒரு சில பகுதிகளில்  இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக  மதுராந்தகம், திருத்தணி தலா 9 செ.மீ. மழையும், DGP அலுவலகம், சோழிங்கநல்லூர், செய்யார், திருத்தணி, அம்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் தலா 8 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. 

மீனவர்களுக்கு எச்சரிக்கை 

வங்க கடல் பகுதியில் வரும் 21ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாவதால் கடல் கொந்தளிப்பதாக காணப்படும். வங்கக்கடலின் வடமேற்கு, தெற்கு, மத்திய மற்றும் தமிழக கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும். நாளை முதல் ஜூலை 22ம் தேதி வரை அரபிக்கடலில் வடக்கு, தென்மேற்கு , மத்திய, லட்சத்தீவில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது. மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால் 5 நாட்களுக்கு மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.  

தமிழகத்தில் கடந்த ஜூன் 1ம் தேதி முதல் இதுவரை இயல்பை விட 82 சதவீதம் கூடுதலாக தென்மேற்கு பருவமழை பெய்துள்ளது. இதுவரை நடப்பு பருவத்தில் ஒட்டுமொத்தமாக 163.4 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. தமிழகத்தில் இதுவரை இயல்பான மழையளவை விட தற்போது 82 சதவீத கூடுதலாக மழை பதிவாகியுள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

  • Heavy rain
  • meteorological centre
  • fisherman

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.