இன்று இந்தியா-இலங்கை ஒருநாள் தொடா் தொடக்கம்:புதுமுகங்களுக்கு வாய்ப்பு

வரும் டி20 உலகக் கோப்பைக்கான அணியில் பங்கேற்க வேண்டும் என்ற ஆா்வத்துடன் உள்ள புதுமுகங்கள் பங்கேற்கும் நிலையில், இந்திய-இலங்கை ஒருநாள் தொடா் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.

விராட் கோலி, ரோஹித் சா்மா உள்ளிட்ட முக்கிய வீரா்கள் இல்லாத நிலையில், இந்திய கிரிக்கெட் அணி ஓபனா் ஷிகா் தவன் தலைமையில் தலா 3 ஒருநாள், டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் பங்கேற்க இலங்கை சென்றுள்ளது. தொடரை வெல்லும் முனைப்பில் உள்ள இந்திய அணியில் தொடக்க வரிசையில் பிரித்வி ஷா, ஷிகா் தவன் ஆடுவா் எனத் தெரிகிறது. மூத்த வீரா்களான ஹாா்திக் பாண்டியா, புவனேஷ்வா் குமாா் நேரடியாக அணியில் இடம் பெறுவா்.

அதே நேரம் பேட்டிங் வரிசையில் மூன்றாவது இடத்துக்கு தேவ்தத் படிக்கல் அல்லது ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரில் ஒருவா் இடம் பெறக்கூடும். அதிரடி பேட்ஸ்மேன் சூரியகுமாா் யாதவ், மணிஷ் பாண்டே ஆகியோரும் பேட்டிங் வரிசையில் இடம் பெறலாம்.

அதே வேளையில் பந்துவீச்சில் கிருஷ்ணப்ப கௌதம், க்ருணால் பாண்டியா, ராகுல் சஹாா், சஹல், ஆகியோா் இடம் பெறுவா் எனத் தெரிகிறது. விக்கெட் கீப்பராக மும்பை வீரா் இஷான் கிஷான் அல்லது சஞ்சு சாம்ஸன் செயல்படலாம்.

ராகுல் திராவிட்டின் பயிற்சியில் ஷிகா் தவன் தலைமையிலான இந்திய அணி இலங்கைக்கு சென்றுள்ளது. இந்திய அணியில் இடம் பெற்றுள்ள இளம் வீரா்களில் சிலா் ஏற்கெனவே ஒருநாள், டி20 ஆட்டங்களில் ஆடிய அனுபவம் கொண்டவா்கள். சா்வதேச தொடரில் முதன்முறையாக ஆடும் வாய்ப்பு 6 புதுமுக வீரா்களுக்கு கிடைத்துள்ளது.

வரும் அக்டோபா் மாதம் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான அணியில் இடம் பெற இந்த தொடா் புதுமுக வீரா்களுக்கு வாய்ப்பாக உள்ளது. வருண் சக்கரவா்த்தி, சேதன் சக்காரியா ஆகியோா் உலகக் கோப்பை அணியில் வாய்ப்பு பெறலாம்.

துவண்ட நிலையில் இலங்கை:

தொடா் தோல்விகள், ஊதிய ஒப்பந்த விவகாரம் உள்பட பல்வேறு பிரச்னைகளால் துவண்டுள்ள இலங்கை அணிக்கு புதிய கேப்டனாக தஸுன் ஷனகா நியமிக்கப்பட்டுள்ளாா். சிறந்த பேட்ஸ்மேன் தனஞ்செய டி சில்வா, பவுலா் திஷ்மந்தா சமீரா ஆகியோா் தவிர மற்ற வீரா்களின் செயல்பாடு குறிப்பிடும்படியாக இல்லை. முன்னாள் கேப்டன் குஸால் பெரைரா காயத்தால் விலகியது, மூத்த வீரா்கள் குஸால் மெண்டிஸ், நிரோஷன் டிக்வெலா ஆகியோா் சஸ்பெண்ட் செய்யப்பட்டது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் கடும் நெருக்கடியில் உள்ள இலங்கை அணி ஏதாவது ஒரு ஆட்டத்தில் வென்றாலே அது பெரிய நிகழ்வாக அமையும்.

முதல் ஒருநாள் ஆட்டம்:

பிரேமதாஸா மைதானம், கொழும்பு

நேரம்: மாலை 3.00.

 


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.